தி.மு.க.,வின் ஆயுட்காலம் 7 மாதங்கள் தான் தென்காசி கூட்டத்தில் பழனிசாமி பேச்சு
தி.மு.க.,வின் ஆயுட்காலம் 7 மாதங்கள் தான் தென்காசி கூட்டத்தில் பழனிசாமி பேச்சு
ADDED : ஆக 06, 2025 12:21 AM

தென்காசி:தி.மு.க.,வின் ஆயுட் காலம் இன்னும் 7 மாதங்கள் தான் என தென்காசியில் நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செய லாளர் பழனிசாமி பேசினார்.
தென்காசியில் பிரசார பஸ் மீது நின்றபடி பழனி சாமி நேற்று மாலை பேசியதாவது: குற்றாலத்தில் காற்றடிக்குது. பஸ் ஆடுது. நின்று கொண்டு பேசுவதற்கு சிரமமாக உள்ளது. அற்புதமான இடம் குற்றாலம். வருண பகவான் அருளால் மழை இல்லை. தென்காசியில் மீண்டும் வெற்றி என்பதற்கான அறிகுறியாக இந்த கூட்டம் இருக்கிறது.
அ.தி.மு.க.,ஆட்சியில் வேளாண் தொழிலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. 2016 மு தல் 2021 வரை 5 ஆண்டுகளில் இரண்டு முறை வேளாண்மை கடனை தள்ளுபடி செய்தோம்.
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், குளங்கள் தூர்வாறும் பணி, பயிர் காப்பீடு , வறட்சி நிவாரணம், பசுமை வீடுகள் திட்டம், கால்நடை வழங்கல் உள்ளிட்ட பல திட்டங்களை செயல் படுத்தினோம்.
தி.மு.க., ஆட்சியில் சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். தங்கம் வெள்ளி விலை நிலவரம் பார்ப்பது போல கொலை, கொள்ளை செய்திகள் தான் உள்ளன.
அ.தி.மு.க., ஆட்சியில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டது. 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், ரூ 7300 கோடி மதிப்பில் 52 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல், 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள். 2011ல் 100 பேரில் 32 பேர் பட்டப்படிப்பு படித்தனர், 2019ல் அது 54 சதவீதமாக உயர்ந்தது.
இந்தியாவில் அதிக சதவீதம் பட்டப்படிப்பு படிக்கும் மாநிலமாக தமிழகம் உயர்ந்தது. லேப்டாப், மினி கிளினிக் போன்ற திட்டங்களை நிறுத்தி விட்டனர்.
குப்பைக்கு வரி, வீட்டு வரி உள்ளிட்ட பலவித வரி உயர்வுகள்.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, கடையநல்லுாரில் அரசு பாலிடெக்னிக், தென்காசி அரசு கல்லூரி, புளியங்குடியில் காய்கறி குளிர் பதன கிடங்கு, எலுமிச்சை சாறு பதப்படுத்தும் மையம் ராமநதி ஜம்பு நதி திட்டம், தென்காசியில் அரசு வனக் கல்லூரி என சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., கூறிய 10 வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் தென்காசி யை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினோம். ரூ.119 கோடி மதிப்பில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இன்னும் திறக்கப்படவில்லை.
ரூ.430 கோடியில் திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச்சாலை அமைத்துள்ளோம். சுரண்டை அரசு கல்லூரி உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ .18 கோடி ஒதுக்கினோம். தென்காசி வெளிவட்ட சுற்றுச்சாலை இன்னும் முடிக்க முடியவில்லை.அதை அப்படியே வைத்திருங்கள் அதை புதிய அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் செயல் படுத்துவோம்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.