பல்லடம் படுகொலை சம்பவம்; சி.பி.ஐ., விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்
பல்லடம் படுகொலை சம்பவம்; சி.பி.ஐ., விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்
ADDED : டிச 06, 2024 02:04 PM

திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த நவ.,29ம் தேதி திருப்பூர் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை போய்விடும். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி, குடியரசு தலைவருக்கும், பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதுவோம். முதல்வர் ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதுவோம்.
தமிழக போலீசாருடன் சி.பி.ஐ., இணைந்து கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இதுவரை இந்தியாவிலேயே இதுபோன்று கிடைக்காத மாதிரி தண்டனை மிக வேகமாக வழங்க வேண்டும். ஆயுதங்களைத் தூக்குபவர்களுக்கு எல்லோருக்கும் முதலும், முடிவுமாக இந்தத் தண்டனை இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் கருத்து.
பத்திரிக்கையாளர்களும் இந்த விஷயத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது தான் நியாயம் கிடைக்கும். இதன்மூலம், ஜனநாயகத்தின் மீது நமக்கு நம்பிக்கை வரும்.
போதை கலாசாரத்தை ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. போதை இல்லாமல் யாராவது இவ்வளவு கொடூரமான கொலைகளை செய்திருப்பார்களா? இளைஞர்கள் நகரங்களை நோக்கி சென்று விட்டதால், கிராமங்களில் வயதானவர்கள் தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.
குறிப்பாக, போலீசார் இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். கிராமப்புற காவல்நிலையங்களுக்கு முதல்வர் ரோந்து வாகனங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும், எனக் கூறினார்.