பாலியல் புகாரில் சிக்கிய பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவில் குருக்கள் பணிநீக்கம்
பாலியல் புகாரில் சிக்கிய பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவில் குருக்கள் பணிநீக்கம்
ADDED : ஜூலை 12, 2025 12:10 AM
பள்ளிக்கரணை:பாலியல் புகாரில் சிக்கிய பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வர் கோவில் குருக்கள், பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக்பாரதி, 39; பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவில் தற்காலிக குருக்கள்.
இவர் மீது, 27 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். புகாரில், 'குடும்ப பிரச்னைக்கு தீர்வு வேண்டி குருக்களை நாடினேன். அவர், தீய சக்திகளை அழிக்க, ருத்ராட்ச மணிகளை தருவதாக கூறி, வடபழனியில் ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்' என, குறிப்பிட்டிருந்தார்.
அசோக்பாரதி அளித்த புகாரில், 'குடும்ப பிரச்னை குறித்து பேச வேண்டும் என இளம்பெண் வந்தார். அதற்காக, வடபழனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.
'அங்கு வந்த அப்பெண்ணின் கணவர், என்னை தாக்கி, எங்களை புகைப்படம் எடுத்தார். அதை காட்டி, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர்' என குறிப்பிட்டிருந்தார்.
இரு புகார்கள் குறித்தும், வடபழனி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்காலிக குருக்களாக பணியாற்றி வந்த அசோக்பாரதியை பணிநீக்கம் செய்து, ஆதிபுரீஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவருடன், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் அதில் தெளிவுபடுத்தி உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு, பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அசோக்பாரதி தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். பின், நீதிமன்றம் வரை சென்று போராடி, மீண்டும் பணிக்கு திரும்பினார்.