பறிபோகும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்... விதிகளை மீறிய அதிகாரிகள்.: பாஜ கண்டனம்
பறிபோகும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்... விதிகளை மீறிய அதிகாரிகள்.: பாஜ கண்டனம்
UPDATED : அக் 25, 2025 12:13 PM
ADDED : அக் 25, 2025 11:47 AM

சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை :
மத்திய அரசின் அங்கீகாரமான 'ராம் சார்' அறிக்கையில் இடம் பெற்றுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியை பாதுகாப்போம், மேம்படுத்துவோம் என்று முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், முதல்வரின் எண்ணத்திற்கு எதிராக, பெரும்பாக்கம் - பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பகுதியை அழித்து, சட்டத்திற்குப் புறம்பாக, மத்திய அரசு விதிகளுக்கு மாறாக, முதல்வருக்கே தெரியாமல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, உண்மைகளை மறைத்து, மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சதுப்பு நில பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதி அளித்தது யார்?
அவசர அவசரமாக
தமிழக சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, வருவாய்த்துறை, சிஎம்டிஏ உள்ளிட்ட அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் சட்டத்தை மீறி அனுமதி அளித்தது ஏன்? இதற்கு காரணமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யார்? சதுப்பு நில ரியல் எஸ்டேட் ஊழல் முதலைகள் யார் என்பதை தமிழக அரசு கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் அங்கீகாரமான ராம் சார் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பெரும்பாக்கம் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி எல்லைக்குள் தனியார் கட்டுமான நிறுவனம், கட்டிடங்கள் உள்ளிட்ட எவ்வித நிரந்தர அமைப்புகளையும் ஏற்படுத்தக் கூடாது. இந்த இடம் சூழலியல் ரீதியாக பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது என்கிற விதிமுறைகளை கண்டுகொள்ளாமல், சட்டத்திற்குப் புறம்பாக, அந்த கட்டுமான நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது சென்னை வாழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மிகப்பெரிய ஊழல்
அந்த நிறுவனம் நிலம் குறித்த உண்மைகளை மறைத்து கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையில் கடந்த 2022 ஜூலையில் விண்ணப்பித்துள்ளது. அதைத் தொடர்ந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் நிலத்தின் அமைவிடம் குறித்து, தமிழக அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையின் வல்லுனர் குழு ஆய்வு செய்தது.
அந்தக் குழு பெரும்பாக்கம் சதுப்பு நிலப் பகுதி, நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக ராம் சார் ஒப்பந்தப்படி அளவிடப்பட்ட இடம் என்கிற உண்மையை மறைத்து, நிலத்தின் அமைவிடம் ஆதாரங்களை திருத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக, சட்டத்திற்கு புறம்பாக, அவர்கள் உரிமை கோரிய 453, 495/2C, 496, 497 ஆகிய சர்வே எண்கள் அடங்கி உள்ளதாக கூறப்படும் 14.7 ஏக்கர் சதுப்பு நிலத்தை முழுவதும் ஆராயாமல், அப்படியே ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்ததன் பின்னணியில் ஊழல் நடந்துள்ளது.
தமிழக அரசின் வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், அனைத்து விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு, தங்கள் துறையின் சார்பாக கள ஆய்வு செய்ததாகப் பதிவு செய்து, நிலத்தின் உண்மைத் தன்மையை மறைத்து விதிகளை மீறி ஒப்புதல் அளித்துள்ளனர்.
மேலும் ராம் சார் தள வரைபடத்தின் அடிப்படையில், தனியர் நிறுவனம் கட்டுமானப் பணிக்காக அனுமதி கேட்ட நிலத்தை, விஞ்ஞான ரீதியாக சட்டப்படி முறையாக ஆய்வு செய்யாமல், அந்நிறுவனம் கேட்ட இடத்தை 'பள்ளிக்கரணை சதுப்பு நிலை எல்லை' என்று புதிய பெயரிட்டு, கோப்புகளில் திருத்தங்கள் செய்து, வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்றம் செய்து, விதிகளை மீறி நிறுவன கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, திமுக ஆட்சி தொடங்கியதும் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்தது. ரியல் எஸ்டேட் முதலாளிகளின் ஆதிக்கம் தமிழக அரசியலில் அதிகமானது.
3000 ஏக்கரும் கபளிகரம் ஆகும்
இந்த சூழ்நிலையில் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 3800 ஏக்கர் நிலப்பரப்பு, ராம் சார் தளமாக கடந்த 2022 ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த சதுப்பு நிலப் பகுதியில் உள்ள 14.7 ஏக்கர் நிலத்தில், 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1250 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட தனியரார் நிறுவனம் அதே 2022 ஜூலை மாதம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கிறது.
அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், அரசின் அனைத்துத் துறைகளிலும், மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப்பகுதி என்கிற உண்மையை மறைத்து, திமுக அரசின் ஆட்சி முடிவதற்குள் திட்டம் துவங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20ல் அந்த நிறுவன திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சென்னை சி.எம்.டி.ஏ. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் இரவு பகல் பாராமல் உழைத்து, கடந்த 2025 ஜனவரி 23 ம் தேதி இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
எனவே, தமிழக அரசு மத்திய அரசின் ராம் சார் நிலப்பகுதியில் ஒரு அடி கூட விட்டுத் தரக்கூடாது.
எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது அறிவிப்பிற்கு எதிராக, தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, சட்டத்திற்குப் புறம்பாக, அனுமதி வழங்க காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு கடிதம் எழுதி உள்ளேன். சென்னை மாநகர மக்களின் உயிரோட்டமான பறவைகள் சரணாலயமாக விளங்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்க தமிழக பா.ஜ.. முழு முயற்சியெடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

