பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை ஒரு வாரத்தில் லிட்டருக்கு ரூ.20 உயர்வு
பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை ஒரு வாரத்தில் லிட்டருக்கு ரூ.20 உயர்வு
ADDED : செப் 18, 2024 11:53 PM
சென்னை:தமிழகத்தில், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லிட்டருக்கு, 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
எண்ணெய் பயன்பாட்டில் பாமாயில், சூரியகாந்திக்கு தேவை அதிகம். உற்பத்தி இல்லாததால், அதிகளவில் இறக்குமதி செய்கிறது. இந்தோனேஷியா, மலேஷியா நாடுகளில் இருந்து பாமாயில்; ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியாகிறது.
தமிழகத்தில், கடந்த வாரத்தில் ஒரு லிட்டர் பாமாயில், 90 ரூபாய்க்கும், சூரியகாந்தி எண்ணெய் லிட்டர், 110 ரூபாய்க்கும் விற்பனையானது. மத்திய அரசு, பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி மீதான வரியை சமீபத்தில் உயர்த்தியது. இதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அவற்றின் விலை லிட்டருக்கு, 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
தற்போது, பாமாயில் லிட்டர், 110 ரூபாய்க்கும்; சூரியகாந்தி எண்ணெய், 130 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து, மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சங்க பொதுச் செயலர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
தமிழக பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் தேவை, 80 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மீதான வரியை, 20 சதவீதமும்; சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான வரியை, 12.50 சதவீதத்தில் இருந்து, 32.50 சதவீதமாகவும், மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இது, இம்மாதம், 14ம் தேதி இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய், 30 லட்சம் டன் கையிருப்பில் இருப்பதால், விலையை உயர்த்தக் கூடாது என, இறக்குமதியாளர்களையும், வணிக சங்கங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, இறக்குமதியாளர்கள் விலைகளை உயர்த்தி விட்டனர். இதனால், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு, 20 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
பண்டிகை காலம் துவங்கியுள்ளதால், வட மாநிலங்களிலும் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. இதனால், கொப்பரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, தேங்காய் எண்ணெய் லிட்டர் விலை, 177 ரூபாயில் இருந்து, 202 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு கூறினார்.