பாம்பன் புதிய ரயில் பாலம்: ஆணையர் அறிக்கையால் சர்ச்சை விசாரணை குழு அமைப்பு
பாம்பன் புதிய ரயில் பாலம்: ஆணையர் அறிக்கையால் சர்ச்சை விசாரணை குழு அமைப்பு
ADDED : நவ 29, 2024 01:46 AM

சென்னை:பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளித்ததுடன், பாதுகாப்பு தொடர்பாக சில கருத்துக்களை, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தன் அறிக்கையில் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விசாரிக்க, ஐந்து பேர் குழுவை ரயில்வே அமைச்சகம் நியமித்துள்ளது.
ஐ.ஐ.டி., ஒப்புதல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் செல்ல, பாம்பன் ரயில் பாலம் முக்கிய வழித்தடமாக உள்ளது. இப்பாலம் 1914ல் கட்டப்பட்டது. தற்போது பாலம் பழுதடைந்து போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை. அதனால், 2019ல் புதிய பாலம் கட்டும் பணியை ரயில்வே நிர்வாகம் துவக்கியது.
ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின் அங்கீகாரத்துடன், பாலத்திற்குரிய அனைத்து தளவாடங்களும் உருவாக்கப்பட்டன. புதிய பாலம், 545 கோடி ரூபாய் செலவில், 101 துாண்களுடன் கட்டப்பட்டது.
கடலுக்குள் அமைக்கப்பட்ட, இந்தியாவின் முதல் செங்குத்து துாக்குப்பாலம் என்ற பெருமையோடு, பாம்பன் ரயில் பாலத்தில் ஏறக்குறைய அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.
இந்த பாலத்தில் கடந்த 13, 14ம் தேதிகளில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, மணிக்கு 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, புதிய பாலம் குறித்த பாதுகாப்பு அறிக்கையை நேற்று முன்தினம் ரயில்வேக்கு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 75 கி.மீ., வேகத்திலும், நடுவில் 72 மீட்டர் நீளமுள்ள துாக்கு பாலத்தில் 50 கி.மீ., வேகத்திலும் ரயில்களை இயக்கலாம். தெற்கு ரயில்வே முதன்மை பொறியாளர் ஆய்வுக்கு பின், வேக கட்டுப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம்.
ரயில்வே வாரியம் பொதுவாக, ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனையை கடைப்பிடிக்கும்.
ஆனால், துாக்கு பாலம் கட்டுமானம், வடிவமைப்பு விஷயத்தில், அதன் ஆலோசனையை பெறவில்லை. துாக்கு பாலத்தின் முன்மாதிரி, ரயில்வே வாரியத்திடம் இல்லாததால், வாரியத்தின் அனுமதியுடன் மும்பை ஐ.ஐ.டி., ஒப்புதலில் அமைத்துள்ளனர்.
இதன் வாயிலாக, ரயில்வே வாரியம் சொந்த வழிகாட்டுதலை மீறியுள்ளது. இதற்கு கமிஷன் எதிர்ப்பு தெரிவித்ததும், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பாலம், 'வெல்டிங்' பணிகளில் விதிமீறல்கள் உள்ளன. இதனால், பாலத்தின் சுமக்கும் திறன் 36 சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
புதிய பாலத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பாதுகாப்பு ஆணையர் கூறியிருப்பது, பயணியர் மத்தியில் அச்சத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள விளக்க அறிக்கை:
பாம்பன் பாலம் 2.05 கி.மீ., நீளமுள்ளது. பாலத்தின் வடிவமைப்பு, சர்வதேச ஆலோசகர் வாயிலாக உருவாக்கப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி.,யால் சரி பார்க்கப்பட்டது. வெளிநாட்டு ஆலோசகரால் வடிவமைக்கப்பட்டது. மும்பை ஐ.ஐ.டி.,யின் வடிவமைப்பை ஆய்வு செய்து சான்று அளித்தது.அதன்பிறகு பாலத்தின் வடிவமைப்பு, தெற்கு ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டின் இரண்டு முன்னணி நிறுவனங்களால் சரிபார்க்கப்பட்ட, ஒரு புகழ்பெற்ற சர்வதேச ஆலோசகரின் ஆலோசனைப்படி பாலம் கட்டப்பட்டுள்ளது. கட்டமைப்பு உறுப்பினர்களின் வெல்டிங், கட்டமைப்பின் செயல்திறன் 100 சதவீதம் சரிபார்க்கப்பட்டது.
அதிநவீன வடிவமைப்பு மற்றும் சிறந்த கட்டுமான நடைமுறைகளுடன் பாலம் கட்டப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் எழுப்பப்பட்ட சந்தேகங்களை, குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஐந்து பேர் குழு அமைத்து, விசாரணை நடத்தப்பட உள்ளது. இக்குழு விசாரித்து, விரைவில் அறிக்கை அளிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி, தெற்கு ரயில்வே தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
செங்குத்தாக ஏறி இறங்கும் பாலத்தின், 'கர்டர்' இந்திய ரயில்வேக்கு புதிது. ஆர்.டி.எஸ்.ஓ.,விடம் இதற்கான வடிவமைப்பு இல்லை.
எனவே, ரயில்வே வாரியம் ஒப்புதலோடு, மும்பை ஐ.ஐ.டி.,யில் கர்டர் வடிவமைப்புக்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு, அவற்றின் ஒப்புதலோடு கட்டமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 75 கி.மீ., வேகத்தில் இயக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
ரயில் சேவை துவங்க இது போதுமானது. பாலத்தில் எப்போதும் ரயில்களை வேகமாக இயக்குவதில்லை.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வழக்கமாக, சில விஷயங்களை சுட்டிக்காட்டுவார். அதை சரி செய்து, ரயில் சேவையை துவக்க நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.