பாம்பன் ரயில் பாலம் குறைபாடுகள் சரி செய்யப்படும்: பொதுமேலாளர் உறுதி
பாம்பன் ரயில் பாலம் குறைபாடுகள் சரி செய்யப்படும்: பொதுமேலாளர் உறுதி
ADDED : நவ 29, 2024 02:31 PM

ராமநாதபுரம்: 'பாம்பன் கட்டுமானப் பணியில் எந்த குழப்பமும் இல்லை; பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ள குறைபாடுகள் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும்' என தெற்கு ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங்., நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணியும், இதன் நடுவில் துாக்கு பாலம் பொருத்தி பல கட்டமாக திறந்து மூடும் சோதனையும், பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்தது. பாலத்தில் அரிப்பு, துருப்பிடித்தல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது.
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளித்ததுடன், பாதுகாப்பு தொடர்பாக சில கருத்துக்களை, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தன் அறிக்கையில் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விசாரிக்க, ஐந்து பேர் குழுவை ரயில்வே அமைச்சகம் நியமித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. ரயில் சேவையைத் துவங்க பாதுகாப்பு கமிஷனர் அனுமதி அளித்துள்ளார். பாம்பன் பாலத்தில் உள்ள குறைபாடுகள் ஒரு வாரத்தில் சரி செய்யப்பட்டு விரைவில் ரயில்கள் இயக்கப்படும். ரயில்வேயிடம் எம்.பி.,க்கள் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.