மாதத்தின் 4வது சனிக்கிழமை பிளாஸ்டிக் ஒழிப்பு பணி அவசியம் ஊராட்சிகளுக்கு உத்தரவு
மாதத்தின் 4வது சனிக்கிழமை பிளாஸ்டிக் ஒழிப்பு பணி அவசியம் ஊராட்சிகளுக்கு உத்தரவு
ADDED : ஆக 26, 2025 07:17 AM

திருப்பூர் : ''கிராம ஊராட்சிகளில் மாதந்தோறும் நான்காவது சனிக்கிழமைகளில், பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த விபரங்களை, 'மீண்டும் மஞ்சப்பை' செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப் படுத்தும் நோக்கில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கிராம ஊராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், கிராம ஊராட்சி நிர்வாகங்களுக்கு வழி காட்டுதல் வழங்கியுள்ளனர்.
அதில், 'நடப்பாண்டு ஆண்டு முழுக்க, ஒவ்வொரு மாதமும், நான்காவது சனிக்கிழமையன்று, மாநில அளவில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் துாய்மைப்படுத்தும் இயக்கம் நடத்தப்பட வேண்டும்.
'உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும். சந்தை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களிலும், பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும்.
'இந்த நடவடிக்கை குறித்த புகைப்படங்களை அரசின் 'மஞ்சப்பை செயலி' வாயிலாக பதிவேற்றம் செய்து, அரசின் கவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.