கடத்தல் கும்பலிடம் இருந்து எறும்புத் திண்ணிகள் மீட்பு; வனத்துறை நடவடிக்கை
கடத்தல் கும்பலிடம் இருந்து எறும்புத் திண்ணிகள் மீட்பு; வனத்துறை நடவடிக்கை
ADDED : மே 31, 2025 02:12 PM

சென்னை: கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட எறும்பு திண்ணிகளை மீட்ட வனத்துறையினர், அவற்றை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவித்தனர்.
தமிழகத்தில் அரியவகை வனவிலங்குகளை வேட்டையாடும் மற்றும் கடத்தும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் சட்ட விரோதமாக வைத்திருக்கும் வனவிலங்குகளை மீட்டு வனப்பகுதியில் விடுவிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் அரிய வகை விலங்கினமான எறும்புத் திண்ணியை சட்டத்துக்கு புறம்பாக பிடித்து வைத்திருந்த கும்பலை பிடித்த வனக்குற்ற தடுப்பு அமைப்பினர், அவற்றை மீட்டனர். மீட்கப்பட்ட எறும்புத்திண்ணிகள் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன.
இதுகுறித்த தகவலை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக உள்ள சுப்ரியா சாகு தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறி உள்ளதாவது:
சென்னை மண்டலத்தில் சட்ட விரோதமாக எறும்புத் திண்ணிகளை வியாபாரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் தமிழக வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு கைது செய்துள்ளது. ஒரு சிறிய மற்றும் பெரிய எறும்புத் திண்ணிகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட எறும்புத் திண்ணிகள் பாதுகாப்பாக அவற்றின் வாழ்விடங்களில் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இதுபோன்ற கடத்தல் சம்பவங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய செயல்களில் ஈடுபட்ட 50 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். உலகில் அதிகம் கடத்தப்படும் பாலூட்டிகளான எறும்புத் திண்ணிகளை காப்பாற்றுவது காலத்தின் கடமையாகும்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவுடன் எறும்புத் திண்ணிகளை வனப்பகுதியில் விடும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.