கழுகுமலை, குன்றக்குடியில் பங்குனி உத்திர தேரோட்டம்
கழுகுமலை, குன்றக்குடியில் பங்குனி உத்திர தேரோட்டம்
ADDED : மார் 23, 2024 08:22 PM

கழுகுமலை/ குன்றக்குடி : கழுகுமலை, குன்றக்குடியில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது.
விழாவின் சிகரமான தேரோட்டம் 9ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறந்து திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடைபெற்றது. இதையடுத்து சண்டிகேஸ்வரர் சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமாள் கோ ரதத்திலும், வைரத் தேரில் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளுதலைத் தொடர்ந்து கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பேரூராட்சி மன்றத் தலைவர் அருணா சுப்பிரமணியன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து பங்குனி உத்திர தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
மேள தாளம், பஞ்சவாத்தியங்கள் முழங்க, அரோகரா கோஷம் முழங்க திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்களுக்கு சமுக ஆர்வலர்கள் பலர் நீர்மோர் வழங்கினர், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பொது மக்களும் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 10ம் திருவிழாவான நாளை தீர்த்தவாரியும், தபசுக் காட்சியும், நாளை மறுநாள் (25ம் தேதி) திருக்கல்யான வைபவமும் நடக்கிறது.
குன்றக்குடி:
குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
குன்றக்குடி பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சண்முகநாதப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளிக்கேடகத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று வையாபுரி தெப்பம் மற்றும் வெள்ளி ரதமும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. காலை 5.30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். மாலை தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடந்தது. நாளை, தீர்த்தவாரி உற்சவமும், மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருள நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் விழாக்குழுவின செய்து வருகின்றனர்.

