தமிழ் பாடப்புத்தக வினியோகத்தை நிறுத்தியதற்கு பன்னீர் கண்டனம்
தமிழ் பாடப்புத்தக வினியோகத்தை நிறுத்தியதற்கு பன்னீர் கண்டனம்
ADDED : ஆக 18, 2025 02:00 AM

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
பிற மாநிலங்களில் வசிக்கும், தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்பதற்காக, அங்குள்ள தமிழ் அமைப்புகள் வாயிலாக, தமிழ் வழிப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
பல ஆண்டுகளாக, அவர்களுக்கு தமிழக அரசு, இலவசமாக தமிழ் பாடப்புத்தகங்கள் அனுப்பி வந்தது. இந்த ஆண்டு புத்தகம் அனுப்பாததால், தமிழ் அமைப்பினர் கேட்டபோது, 'நிதி நெருக்கடியால், 10 புத்தகங்களை மட்டும் அனுப்ப முடியும்' என கூறப்பட்டு இருக்கிறது.
தி.மு.க., அரசின் நிதி நிர்வாக சீரழிவால், வெளி மாநிலங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழ் மாணவ - மாணவியர், தமிழ் மொழி கற்கும் வாய்ப்பை இழந்து உள்ளனர்.
தமிழ் மொழி உலகெங்கும் வளர வேண்டுமானால், அதற்கான செலவை தமிழக அரசுதான் ஏற்க வேண்டும்.
தமிழகம் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்றதாக முதல்வர் ஸ்டாலின் பெருமை அடித்துக் கொள்கிறார். ஆனால், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தமிழ் பாடப்புத்தகங்களை, தமிழ் குழந்தைகளுக்கு அனுப்ப, நிதி நெருக்கடியை சுட்டிக்காட்டுவது, தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
உண்மையிலேயே, தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறை இருந்தால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் கேட்கும் தமிழ் பாடப்புத்தகங்களை, இலவசமாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.