தரமற்ற பருப்பு, பாமாயில் கொள்முதல் முதல்வருக்கு பன்னீர் கோரிக்கை
தரமற்ற பருப்பு, பாமாயில் கொள்முதல் முதல்வருக்கு பன்னீர் கோரிக்கை
ADDED : டிச 21, 2024 01:04 AM
சென்னை: 'ரேஷனில் வழங்க தரமற்ற பருப்பு, பாமாயில் வாங்குவதை, முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, 60,000 டன் துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயில் வழங்க, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இதில் பங்கேற்ற நிறுவனங்களில், துவரம் பருப்புக்கு மாதிரி வழங்கிய ஆறு நிறுவனங்கள் மற்றும் பாமாயிலுக்கு மாதிரி வழங்கிய மூன்று நிறுவனங்களின் பொருட்கள் தரமற்றவை என, ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேல்மட்டத்திலிருந்து வந்த நெருக்கடி காரணமாக, நிராகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மாதிரிகள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, தரமானவை என பரிந்துரைக்க நிர்பந்திக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வருகின்றன.
தரப் பரிசோதனையில் தேர்வாகாத நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றை மக்களுக்கு வினியோகித்தால், அவை மக்களுக்கு கேடு விளைவிக்கும்.
இதை கூட பொருட்படுத்தாமல், அந்த நிறுவனங்களிடம் பொருட்களை கொள்முதல் செய்வது, ஊழலின் உச்சக்கட்டம். இதில், முதல்வர் தனிக் கவனம் செலுத்தி, தரமில்லாத பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.