போதை பொருட்கள் நடமாட்டம்; கட்டுப்படுத்த பன்னீர் கோரிக்கை
போதை பொருட்கள் நடமாட்டம்; கட்டுப்படுத்த பன்னீர் கோரிக்கை
ADDED : மார் 03, 2024 02:35 AM
சென்னை : 'போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், போதைப்பொருட்கள் விற்பனை; தீய சக்திகளின் நடமாட்டம் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான, போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், தி.மு.க., அயலக அணி துணை அமைப்பாளரின் வீடு, தங்கும் விடுதி மற்றும் அலுவலகங்களில், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதோடு, அவற்றுக்கு சீல் வைத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தி.மு.க., மாவட்ட செயலர் வீட்டில் சோதனை நடப்பதாக தகவல் வெளியானது.
தி.மு.க.,வினர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இளைஞர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கியது தான், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க., அரசின் சாதனை.
இளைஞர்கள் நலனில், முதல்வருக்கு அக்கறை இருக்குமானால், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை மேற்கொண்டவர்கள், அதன் வழியே பயனடைந்தவர்கள் குறித்து, விரிவான விசாரணை நடத்தி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

