தனியார் பஸ்களை இயக்கும் அரசின் முடிவுக்கு பன்னீர் எதிர்ப்பு
தனியார் பஸ்களை இயக்கும் அரசின் முடிவுக்கு பன்னீர் எதிர்ப்பு
ADDED : அக் 26, 2024 07:07 PM
சென்னை:'தீபாவளியை முன்னிட்டு, தனியார் பஸ்களை அரசு எடுத்து இயக்கும் முடிவை கைவிட வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
'அரசே தனியார் பஸ்களை எடுத்து இயக்கும்' என, அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. பஸ்கள் வாங்குவது குறித்து, பட்ஜெட்டில் சொல்லப்பட்ட அறிவிப்புகள், இன்னும் காகித வடிவிலேயே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
புதிய பஸ்களை வாங்கி, நிறுத்தி வைக்க முடியாது; கூடுதலாக ஊழியர்களை நியமிக்க முடியாது என தெரிவித்திருப்பது, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடுவிழா எடுக்க, தி.மு.க., அரசு முடிவு செய்து விட்டதோ என, எண்ணத் தோன்றுகிறது.
அரசு போக்குவரத்துக் கழகங்கள் வசம் உள்ள அனைத்து பஸ்களையும் முழு வீச்சில் இயக்கி, மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், வாங்கப்பட்ட புதிய பஸ்கள், புதுப்பிக்கப்பட்ட பஸ்கள், கழிவு செய்யப்பட்ட பஸ்கள் எண்ணிக்கை குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.