ADDED : ஆக 11, 2025 03:48 AM

சென்னை: எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவை விமர்சித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அ.தி.மு.க.,வை துவக்கி, தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிரூபித்த எம்.ஜி.ஆர்., தொடர்ந்து மூன்று முறை வென்று, ஆட்சியை பிடித்து, முதல்வராகவே மறைந்தார். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் துவக்கிய அ.தி.மு.க., அனைவருக்குமான கட்சி என்பதால் தான், 58 ஆண்டு கால திராவிட ஆட்சியில், 30 ஆண்டுகள் அ.தி.மு.க.,வே ஆட்சியில் இருந்தது.
இப்படிப்பட்ட தலைவரை, 'திராவிட இயக்கத்தில், பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர்' என, திருமாவளவன் பேசியது, கடும் கண்டனத்துக்கு உரியது. அதேபோல், 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு, சட்டப் பாதுகாப்பு வாங்கி கொடுத்தவர் ஜெயலலிதா. 'சமூக நீதி காத்த வீராங்கனை' என போற்றப்பட்ட அவரை திருமாவளவன் விமர்சிப்பது, நியாயமற்ற செயல்.
தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற வேண்டும் என்பதற்காக, அக்கட்சியையோ அதன் தலைவரையோ, எதையாவது கூறி புகழ்ந்து பேசட்டும். ஆனால், மக்கள் செல்வாக்கு பெற்ற, ஜாதி மதங்களைக் கடந்த, மறைந்த தலைவர்களை விமர்சிப்பது நாகரிகமற்ற செயல். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றிய தன் விமர்சனத்தை, திருமாவளவன் உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.