சட்டவிரோத மது விற்பனை பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
சட்டவிரோத மது விற்பனை பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
ADDED : ஜன 04, 2025 08:39 PM
சென்னை:சட்டவிரோத மது விற்பனையை கண்டுகொள்ளாமல், தி.மு.க.,வினரின் வருமானத்தை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் அளவற்ற தீமைகளை ஏற்படுத்தும் மதுவை ஒழிப்பதற்கு பதிலாக, மதுவை தி.மு.க., அரசு ஊக்குவிக்கிறது. மதுவிலக்கு துறை தி.மு.க., ஆட்சியில் மது வளர்ப்பு துறையாக மாறியுள்ளது.
மது கடைகளின் எண்ணிக்கை, திறந்திருக்கும் நேரத்தை குறைப்பது, மதுக்கூடங்களை அறவே ஒழிப்பது ஆகியவை பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான படிக்கட்டுகள். இவற்றுக்கு முற்றிலும் முரணாக தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது.
மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் இரவு 10:00 முதல் மறுநாள் பகல் 12:00 மணி வரை மதுக்கூடங்களில் அதிக விலைக்கு மது விற்கப்படுகிறது. சென்னை பூந்தமல்லி பகுதிகளில், 150 ரூபாய் மது பாட்டில் 250 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், குடிநீர், பழங்கள், ஊறுகாய் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதன் வாயிலாக, தி.மு.க.,வினர் தங்கள் வருமானத்தை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக, பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

