புறவழி சாலைகளில் சுங்க கட்டணம் பன்னீர்செல்வம் கண்டனம்
புறவழி சாலைகளில் சுங்க கட்டணம் பன்னீர்செல்வம் கண்டனம்
ADDED : ஆக 16, 2025 02:01 AM

சென்னை:தமிழகத்தில், புறவழிச் சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு, சுங்கக் கட்டணம் வசூலிக்க, தி.மு.க., அரசு முடிவு செய்திருப்பதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் 2021 செப்.,ல் சுங்கக் கட்டண உயர்வு குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதில், பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் '2008ல் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின்படி 60 கி.மீ.,க்கு, ஒரு சுங்கச்சாவடி வீதம் 16 சுங்கச்சாவடிகள்தான் வேண்டும். விதியை மீறி, நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32ஐ மூட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும்' என்றார்.
நான்கு ஆண்டுகளாகியும், எந்த சுங்கச்சாவடியும் மூடப்பட்டதாக தெரியவில்லை. மாநில அரசின் வருவாயை பெருக்கும் வகையில், சென்னை வண்டலுார் - மீஞ்சூர் வெளி வட்டச்சாலையில் பராமரிப்பு மற்றும் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பணிக்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, அரசுக்கு ரூ.2,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இதுபோல, நாமக்கல், இடைப்பாடி, கோவை கிழக்கு, கோவை மேற்கு, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருச்சி, கரூர், அருப்புக்கோட்டை, பெரியகுளம், ஆண்டிப்பட்டி என பல்வேறு புறவழிச் சாலைகளை, தனியாரிடம் ஒப்படைத்து, சுங்க கட்டணம் வசூலிக்க தி.மு.க., அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது கண்டனத்துக்கு உரியது.
வாகன உரிமையாளர்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு, வாகன கட்டணமும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும், பெருமளவு உயரும்.
புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும். சட்டசபையில் கூறியபடி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், 32 சுங்கச் சாவடிகளை மூட, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.