70 வயதானவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
70 வயதானவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ADDED : மார் 18, 2025 08:05 PM
சென்னை:'தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 70 வயது ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், முழு மருத்துவ செலவை ஏற்கவும், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோருக்கு, 80 வயது நிறைந்ததும், 20 சதவீதம் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை மாற்றி, 70 வயது நிறைவடையும்போது, 10 சதவீதம், 80 வயது நிறைவடையும்போது, 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இது குறித்து வாய் திறக்காமல், அரசு மவுனமாக இருக்கிறது.
ஓய்வூதியதாரர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இருந்தாலும், மருத்துவ செலவுக்கான முழுத் தொகையையும், காப்பீட்டு நிறுவனம் வழங்குவதில்லை என, ஓய்வூதியதாரர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, நான்கு ஆண்டுகளுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணமில்லா சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என இருந்தாலும், அனைத்து நேர்வுகளிலும், 60 முதல் 70 சதவீதம் வரையிலான செலவை மட்டும், காப்பீட்டு நிறுவனம் ஏற்கிறது.
மீதித் தொகைக்கு ஓய்வூதியதாரர்கள் சிரமப்படுகின்றனர். வயது அதிகரிக்க அதிகரிக்க, மருத்துவ செலவு கூடிக் கொண்டே வருகிறது. எனவே, தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 70 வயது ஓய்வூதியதாரர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், வரம்புக்கு உட்பட்டு, முழு மருத்துவ செலவையும், காப்பீட்டு நிறுவனம் ஏற்பதை உறுதி செய்யவும், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.