பொங்கல் தொகுப்பில் ரூ.2,000 ரொக்கம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பொங்கல் தொகுப்பில் ரூ.2,000 ரொக்கம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ADDED : டிச 30, 2024 12:44 AM
சென்னை: 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
பொங்கல் பண்டிகைக்கு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வாடிக்கை.
மூன்று ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பரிசு வழங்குவதில் பல குளறுபடிகள் ஏற்பட்டன.
பயனற்றவை
கடந்த 2022ல், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்து, பாதி பொருட்கள் கூட வினியோகம் செய்யப்படவில்லை; வழங்கப்பட்ட பொருட்களும் பயனற்றவை என்ற புகார் எழுந்தது.
அதற்கு பரிகாரம் காணும் வகையில், கடந்த ஆண்டு, 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தலை தொடர்ந்து, லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் தவிர்த்து, மற்றவர்களுக்கு 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால், பாதிக்கும் மேற்பட்டோருக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படவில்லை.
மக்கள் அதிர்ச்சி
வரும், 2025 பொங்கல் பண்டிகைக்கு, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
'பெஞ்சல்' புயல் மற்றும் கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தி.மு.க., அரசின் பொங்கல் பரிசு தொகுப்பின் அறிவிப்பால், பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.