தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஜெ., விசுவாசி பன்னீர்செல்வம் தி.மு.க.வில் ஐக்கியம்

ஜெ., விசுவாசி பன்னீர்செல்வம் தி.மு.க.வில் ஐக்கியம்

ஜெ., விசுவாசி பன்னீர்செல்வம் தி.மு.க.வில் ஐக்கியம்


UPDATED : பிப் 28, 2026 12:07 AM

ADDED : பிப் 27, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 28, 2026 12:07 AM ADDED : பிப் 27, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தீயசக்தி என்று ஜெயலலிதாவால் முத்திரை குத்தப்பட்ட தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்தார். மகனுடன் அறிவாலயம் சென்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த பன்னீர்செல்வம், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனி அணியாக செயல்பட்டு வந்தார். வரும் சட்டசபை தேர்தலுக்குள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர கடுமையாக முயற்சி செய்தார். அதற்கு பா.ஜ. மேலிடத்தின் ஆதரவையும் நாடினார். ஆனால், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி சம்மதிக்கவில்லை.

அ.தி.மு.க. தொண்டர்களால் புனிதமாக கருதப்படும் அக்கட்சியின் தலைமை நிலையமான எம்.ஜி.ஆர். மாளிகையை, பன்னீர்செல்வம் அடியாட்களுடன் சென்று அடித்து உடைத்து சூறையாடிய போதே அவர் அதிமுகவில் நீடிக்கும் அருகதையை இழந்து விட்டார் என பழனிசாமி சொல்லி வந்தார்.

பன்னீர்செல்வம் திமுகவுடன் இணக்கமாக இருக்கிறார்; எப்படியும் அந்த கட்சியில் ஐக்கியம் ஆவார் என்றும் பழனிசாமி கணித்தார். அதை உறுதி செய்வது போல, பன்னீர் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் தி.மு.க.வில் சேர்ந்தனர். பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பனும் தனித்து நின்றனர்.

சமீபத்தில் பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போதே, அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. ஆனாலும், அவர் தி.மு.க.வில் சேரும் முடிவை அறிவிக்காமல் இருந்து வந்தார். அவரது ஆதரவாளர் அய்யப்பன், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன், மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும்' என சட்டசபையில் பேசினார். அந்த பேச்சு பன்னீர்செல்வத்தின் அரசியல் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியது.

இந்த பின்னணியில் நேற்று சென்னையில் ஒரு ஹோட்டலுக்கு பன்னீர்செல்வம் சென்றார். அங்கு, அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்தார். இருவரும் அங்கிருந்து அறிவாலயம் சென்றனர். அங்கு முதல்வர், அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் காத்திருந்தனர். ஸ்டாலின் ஆசி பெற்று, தோளில் கருப்பு சிவப்பு துண்டு போட்டு, உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து போட்டு பன்னீர்செல்வம் திமுகவின் உறுப்பினர் ஆனார். அவர் மகன் ரவீந்திரநாத் துணை முதல்வர் உதயநிதியின் ஆசியுடன் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார்.

பின்னர், பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார். அவர்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதுதான் நடக்கும் பழனிசாமி ஒரு சர்வாதிகாரி. ஆணவம் பிடித்தவர். அதிமுக இனி எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது. அண்ணாதுரை, கருணாநிதி வழியில் ஸ்டாலின் செயல்படுவதால், நான் தி.மு.க.வில் சேர்ந்தேன். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

'பண்பானவர் பன்னீர்செல்வம்'


முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:தாய் கட்சியான தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரை தாங்கிய அவர், திராவிட இயக்க கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். வரும் சட்டசபை தேர்தல் என்பது, தமிழகத்திற்கும், பாசிச பா.ஜ.,வுக்கும் இடையிலான ஜனநாயக போர். இதை உணர்ந்து தான், பல்வேறு ஜனநாயக சக்திகளும் தி.மு.க., கூட்டணியில் இணைந்து வருகின்றன. நம்மோடு இணைந்துள்ள பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர். அவரது வரவு நல்வரவாகட்டும்; தமிழகம் வெல்லட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா


போடிநாயக்கனுார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக பன்னீர்செல்வம் இருந்தார். அவரது ஆதரவாளராக உள்ள அய்யப்பன், உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவர்கள் இருவரும் நேற்று தலைமை செயலகத்திற்கு வந்தனர்; தங்களது எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, சட்டசபை செயலர் சீனிவாசனிடம் வழங்கினர். கடந்த 20ம் தேதி, கடைசி நாள் சட்டசபை கூட்டம் நடந்தபோது, முதல்வர் ஸ்டாலினை, அய்யப்பன் புகழ்ந்து பேசினார். அப்போது, சபையில் அமர்ந்திருந்த பன்னீர்செல்வம், அவரது பேச்சை ரசித்து கேட்டார். இருவரும் தி.மு.க.,வில் இணையப் போவதாக அப்போதே தகவல் கசிந்தது. இதை உறுதி செய்யும் வகையில், வளர்பிறை ஏகாதசி நாளான நேற்று, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இருவரும் தி.மு.க.,வில் இணைந்தனர்.



எதிரும் புதிருமாக அரசியல் செய்தவர்கள்


தேனி மாவட்டத்தில் பன்னீர்செல்வமும், தங்க.தமிழ்ச்செல்வன் எம்.பி.,யும் அ.தி.மு.க.,வில் இருந்தபோது எதிரும் புதிருமாக இருந்தவர்கள். தங்க.தமிழ்ச்செல்வன் தி.மு.க.,வில் இணைந்த பின், அவருக்கு மாவட்டச் செயலர் பதவி கிடைத்தது. அவரது அரசியல் எதிரியாக இருந்த பன்னீர்செல்வமும் தற்போது தி.மு.க.,வில் இணைந்துள்ளார். அறிவாலயத்திற்கு வந்த பன்னீர்செல்வத்தை, தங்க.தமிழ்ச்செல்வன் வரவேற்றார். மாவட்ட அரசியலில் இருவரும் இணைந்து செயல்படுவரா என்பது போகப் போகத் தான் தெரியும்.



தி.மு.க.,வுக்கு போனது அவரது விருப்பம்


அ.தி.மு.க.,வில் இருந்த பன்னீர்செல்வம், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும், முதல்வராகவும் பணியாற்றியவர். இன்று, அவர் விருப்பப்படி, தி.மு.க.,வில் இணைந்திருக்கிறார். அது, அவரின் சொந்த முடிவு. எங்களை பொறுத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருக்கிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாளை மதுரை வருகிறார்.
-- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,



அ.தி.மு.க., அறிவாலயம்


பன்னீர்செல்வம் அறிவாலயத்தில் அடைக்கலமானதால், அ.தி.மு.க.,விற்கான கெட்ட நேரம் விலகி விட்டது. தற்போது அண்ணா அறிவாலயம், அனைத்திந்திய அண்ணா தி.மு.க., அறிவாலயமாக மாறிவிட்டது. தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் எந்த பதவி பெற்றாலும், அது துரோகத்திற்கு கிடைத்த பரிசாக இருக்கும். ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பதவிக்காக எந்த எல்லைக்கும் பன்னீர்செல்வம் செல்வார்.
- உதயகுமார், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர், அ.தி.மு.க.,



பன்னீர் ஆதரவாளர் பழனிசாமியுடன் ஐக்கியம்


திருச்சியைச் சேர்ந்த வெல்லமண்டி நடராஜன், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சுற்றுலா துறை அமைச்சராக இருந்தார். 2023ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டபோது, அவருடன் நடராஜனும் வெளியேறி, அவரது தீவிர ஆதரவாளராக மாறினார். தற்போது பன்னீர் தி.மு.க.,வில் இணைந்த நிலையில், நடராஜன் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, அக்கட்சியில் மீண்டும் இணைந்தார்.



- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us