பிரதமரை சந்திக்கிறார் பன்னீர்செல்வம்: அரசியல் எதிர்காலம் குறித்து பேச திட்டம்
பிரதமரை சந்திக்கிறார் பன்னீர்செல்வம்: அரசியல் எதிர்காலம் குறித்து பேச திட்டம்
UPDATED : ஜன 02, 2024 08:50 AM
ADDED : ஜன 02, 2024 07:22 AM

சென்னை: திருச்சியில் இன்று(ஜன.,2) பிரதமர் நரேந்திர மோடியை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சந்திக்கிறார்.
பா.ஜ., கூட்டணியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் ஆகியோர் இணைந்து போட்டியிட, விருப்பம் தெரிவித்துள்ளனர். பா.ஜ., தலைமை இன்னமும் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. இந்த சூழ்நிலையில், பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி, இன்று திருச்சி வருகிறார்.
அவரை சந்திக்க, பன்னீர்செல்வம் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது; அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பிரதமரை வரவேற்கும், வழியனுப்பும் நிகழ்ச்சிகளில், பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் பங்கேற்கின்றனர்.
பிரதமருடான சந்திப்பின்போது, அரசியல் எதிர்காலம் குறித்து பேச, பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். பா.ஜ., கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்தும் பிரதமரிடம் பேச உள்ளதாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் நாளை காலை 10:00 மணிக்கு, சென்னை திருவான்மியூரில் உள்ள, ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.
மாலையில் செங்குன்றத்திலும், நாளை மறுதினம் காலை காஞ்சிபுரத்திலும், மாலையில் செங்கல்பட்டிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றன. இதில் பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

