UPDATED : பிப் 14, 2024 05:20 AM
ADDED : பிப் 14, 2024 12:53 AM

சென்னை: சட்டசபையில், தற்போது பன்னீர்செல்வம் அமர்ந்துள்ள இருக்கை, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமாருக்கு ஒதுக்கப்பட உள்ளது.
அ.தி.மு.க.,விலிருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். புதிதாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக, முன்னாள் அமைச்சர் உதயகுமாரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்தனர்.
தன் விருப்பம்
அதை முறைப்படி சபாநாயகரிடம் தெரிவித்து, அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அருகே, இருக்கை ஒதுக்க வலியுறுத்தினர். ஏற்கனவே அந்த இருக்கையில், பன்னீர்செல்வம் இருந்ததால், அதை உதயகுமாருக்கு, சபாநாயகர் ஒதுக்காமல் இருந்தார்.
ஒவ்வொரு முறைசட்டசபை கூடும்போதும், அ.தி.மு.க.,வினர் இருக்கை விவகாரத்தை எழுப்புவதும், அதற்கு சபாநாயகர் இருக்கை ஒதுக்குவது தன் விருப்பம் என பதில் அளிப்பதும், வாடிக்கையாக இருந்தது.
வழக்கம்போல், நேற்று சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எழுந்து, ''எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து,எங்கள் சட்டசபை கொறடா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் நான்கு முறை தங்களை சந்தித்து, மனு அளித்தனர்.
''எதிர்க்கட்சி தலைவர் இருக்கை அருகே, துணைத் தலைவர் இருக்கை ஒதுக்குவது சட்டசபை மரபாக உள்ளது. அந்த மரபை தாங்கள் நிறைவேற்றி தர வேண்டும்,'' எனவலியுறுத்தினார்.
மறுபரிசீலனை
முதல்வர் ஸ்டாலின் எழுந்து, ''எதிர்க்கட்சி தலைவர், தங்கள் கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள உதயகுமாருக்கு, இடம் ஒதுக்கி தரும்படி,தொடர்ந்து சபையில் பேசி வருகிறார்.
''நீங்கள் சபாநாயகருக்கு உள்ள அதிகாரம் எனக் கூறி, ஏற்கனவே இதே சபையில் சபாநாயகராக இருந்த தனபால் அளித்த தீர்ப்பை, அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறீர்கள். எனினும், எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கையை, நீங்கள்மறு பரிசீலனை செய்து, ஆவன செய்ய வேண்டும்,'' என, சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, ''எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கையை, முதல்வர் பரிசீலிக்க கோரினார். நிச்சயமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' எனக் கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வாழத்து
எனவே, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இருக்கை மாறுவது உறுதியாகி உள்ளது. எந்தப் பகுதியில் இருக்கை ஒதுக்குவது என்பதை, சபாநாயகர் முடிவு செய்வார். நேற்று பன்னீர்செல்வம் சட்டசபைக்கு வரவில்லை.
சபாநாயகர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், உதயகுமாருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

