'பி டீம்' என அ.தி.மு.க.,வினர் விமர்சனம்; தி.மு.க.,வை தாக்க துவங்கிய பன்னீர்செல்வம்
'பி டீம்' என அ.தி.மு.க.,வினர் விமர்சனம்; தி.மு.க.,வை தாக்க துவங்கிய பன்னீர்செல்வம்
ADDED : ஆக 10, 2025 06:21 AM

சென்னை: தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க., அரசை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளார்.
கடந்த ஜூலை 26ம் தேதி, தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு, பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்; அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர், மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து அறிக்கை விட்டார்.
கடந்த ஜூலை 31ல், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து, 40 நிமிடங்கள் பேசினார். அப்போது, 'எதிர்காலத்தில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா அல்லது ஜெயலலிதா கூறியது போல தி.மு.க.,வை தீய சக்தியாகத்தான் பார்க்கிறீர்களா?' என, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம், 'அரசியலில் நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை என்பது தான் கடந்த கால வரலாறு. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும் போது, எதுவும் நடக்கலாம்' என்றார்.
இதனால், 'தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கப் போகிறார்; தி.மு.க,வின் 'பி டீம்' ஆக மாறி விட்டார்; தி.மு.க.,வில் சேரப் போகிறார்; ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து விட்டார்; கருணாநிதிக்கு ஆர்.எம்.வீரப்பன் போல, ஸ்டாலினுக்கு பன்னீர்செல்வம்' என, அ.தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' என்ற அமைப்பை ஏற்படுத்தி, அ.தி.மு.க.,வுக்கு உரிமை கோரி வரும் பன்னீர்செல்வத்திற்கு, இது, அரசியல் ரீதியில் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ந்தால், 'அ.தி.மு.க., தொண்டர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அக்கட்சிக்கும் உரிமை கோர முடியாது' என, பன்னீர்செல்வத்திடம், அவரது ஆதரவாளர்கள் எடுத்து கூறியுள்ளனர்.
அதை தொடர்ந்து, 'துக்கம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்றதை, அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்' என அறிக்கை விட்டார். அதன்பின்னும் விமர்சனங்கள் தொடர்கின்றன. அதனால், 'வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழகம், தி.மு.க., ஆட்சியில் அழிவுப் பாதையில் செல்கிறது; விவசாயிகளின் வாழ்வாதாரத்தை குழி தோண்டி புதைக்கிறது; துாய்மை பணியாளர்களுக்கு துரோகம் இழைக்கிறது' என, கடந்த சில நாட்களாக, தி.மு.க., அரசை பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்து வருகிறார்.