பார்வை மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை நிறைவேற்ற பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பார்வை மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை நிறைவேற்ற பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ADDED : பிப் 17, 2024 10:35 AM
சென்னை:'ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த, பார்வை மாற்றுத் திறனாளிகளை, போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க.,தேர்தல் அறிக்கையில், '2013ம் ஆண்டு முதல், ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே நடத்தப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற்று, இன்னும் வேலை வாய்ப்பை பெறாத இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. மாறாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, போட்டித் தேர்வு என்ற முடிவை, தி.மு.க., எடுத்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, பார்வை மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கு போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., வழியே சிறப்பு தேர்வு நடத்தி, அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். ஊக்கத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் எனக் கோரி, கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக, கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதமிருந்த பார்வை மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி அருகே விடியற்காலை இறக்கி விடப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. தி.மு.க., அரசின் இந்த செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியது. அறநெறி மீறி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்து பேச வேண்டும்.
அவர்களுடைய கோரிக்கைகளுக்கு, சுமூகத் தீர்வு காண வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., சார்பில் சிறப்பு தேர்வு நடத்தி, அவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.