சிறு கனிம நில வரி உயர்வு ரத்து செய்ய பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சிறு கனிம நில வரி உயர்வு ரத்து செய்ய பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ADDED : ஏப் 23, 2025 11:20 PM
சென்னை:'சிறு கனிம நில வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த சில நாட்களாக, சிறு கனிம நில வரியை கைவிடுவது உள்ளிட்ட, 24 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் பேசிய தி.மு.க., அரசு, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல், புதிய வரி விதிப்புக்கு ஏற்ப, ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்த அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, ஒரு யூனிட் ஜல்லி விலை, 4,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும்; ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை, 5,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாகவும்; ஒரு யூனிட் பி.சாண்ட் விலை, 6,000 ரூபாயில் இருந்து 7,000 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது. தி.மு.க., அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால், புதிதாக விதிக்கப்பட்டுள்ள, சிறு கனிம நில வரியை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி, கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களின் போராட்டத்தை, முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.
ஆனால் அதை செய்யாமல், மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமையை சுமத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., அரசின் நடவடிக்கை, வீடு கட்ட திட்டமிட்டிருக்கும் மக்களையும், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடுகளை வாங்க இருக்கும் மக்களையும், மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே, கடன் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருப்பவர்கள், கூடுதல் நிதி சுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். எனவே, சிறு கனிம நில வரியை ரத்து செய்து, ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

