பன்னீர்செல்வம், வாசனுக்கு தொகுதி பங்கீட்டில் இழுபறி
பன்னீர்செல்வம், வாசனுக்கு தொகுதி பங்கீட்டில் இழுபறி
ADDED : மார் 21, 2024 12:56 AM
சென்னை:பா.ஜ., கூட்டணியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கட்சி, த.மா.கா., ஆகியவற்றுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., - த.மா.கா., - அ.ம.மு.க., - தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு குழு ஆகிய கட்சிகள் உள்ளன.
கமலாலயம்
கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேசி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட அக்கட்சி தலைவர்களுக்கு, பா.ஜ., அழைப்பு விடுத்தது.
கூட்டணி கட்சி தலைவர்கள், சென்னை, கமலாலயம் வந்து, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உடன் நேற்று பேச்சு நடத்தினர்.
இதற்காக நேற்று மதியம், பன்னீர்செல்வம் கமலாலயம் வந்தார்.
அவருக்கு, ஒரு தொகுதி ஒதுக்குவதாகவும், தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறும் பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதை, பன்னீர்செல்வம் ஏற்கவில்லை.
அவர், இரு தொகுதிகளை கேட்பதாகவும், தனி சின்னத்தில் போட்டியிட போவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு பா.ஜ, மறுப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால், தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், பன்னீர்செல்வம் சென்றார்.
ஆலோசனை
இதேபோல், வாசனும் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவிப்பதாக தெரிகிறது. இதனால், அவரும் நேற்று கமலாலயம் வந்தும் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் சென்றார்.
கமலாலயத்தில் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
தமிழக பா.ஜ., தலைவர்களுடன், ஆரோக்கியமான முறையில் பேச்சு நடத்தினோம். இது, சுமுகமாக நடந்தது. நாளை, எங்கள் கட்சி மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்கிறது.
பா.ஜ., தலைவர்கள் கூட்டத்தில் பேசிய தகவலை, மாவட்ட செயலர்களிடம் தெரிவிக்க வேண்டும். அந்த கூட்டத்தில் முடிவு எடுத்து, எங்களின் பதில் நாளை மதியம் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசன் அளித்த பேட்டி:
பா.ஜ., தேர்தல் குழுவினருடன், நானும், கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து பேசினோம். மிக சுமுகமான முறையில், மகிழ்ச்சியான முறையில் கூட்டம் முடிந்தது. எந்த தொகுதிகள், அதிக வெற்றி வாய்ப்பு உள்ள சூழல், களப்பணி தொடர்பாக நுட்பமாக ஆலோசனை செய்தோம். மீண்டும், அவர்களுடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்.
பா.ஜ., தலைமையிலான கூட்டணியில், அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ளன; எல்லா கட்சிகளும் வெற்றிபெறும் நிலையை பா.ஜ., ஏற்படுத்த வேண்டும்.
பேச்சு, மகிழ்ச்சியாக இருந்தது என்றால், பேச்சின் முடிவும் மன நிறைவாக இருக்கும். கூட்டணி கட்சிகளின் வெற்றியை, த.மா.கா., வெற்றியாக கருதும் தலைவன் நான். அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தாமதம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

