ஓய்வூதிய உயர்வு வழங்குவதில் தாமதம் பன்னீர்செல்வம் கண்டனம்
ஓய்வூதிய உயர்வு வழங்குவதில் தாமதம் பன்னீர்செல்வம் கண்டனம்
ADDED : பிப் 18, 2025 08:16 PM
சென்னை:ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, 15 ஆண்டுகளுக்கு பிறகு வழங்க வேண்டிய, முழு ஓய்வூதியத்தை வழங்காமல் இருப்பதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோருக்கு, 80 வயது நிறைந்ததும், 20 சதவீதம் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை மாற்றி, '70 வயது நிறைவடையும்போது, 10 சதவீதம், 80 வயது நிறைவடையும்போது, மேலும் 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க., அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளில், இதுவும் ஒன்று.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட, முழு ஓய்வூதிய தொகையில், 33 சதவீதத்திற்கு மிகாமல், அரசுக்கு ஒப்படைப்பு செய்து, அதற்கான மொத்தத் தொகையை பெற்றுக் கொள்வது வழக்கம். இதற்கு பதிலாக, முழு ஓய்வூதியத் தொகையில், 33 சதவீதம் குறைக்கப்படும். இதை குறை ஓய்வூதியம் என்பர். இந்த குறை ஓய்வூதியம் 15 ஆண்டுகள் வழங்கப்படும். அதன் பிறகு முழு ஓய்வூதியம் வழங்கப்படும்.
அதேபோல் 80 வயது நிறைந்த ஓய்வூதியதாரர்களுக்கு, 20 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். அதன்பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதுதான் நடைமுறை.
இதை அமல்படுத்துவதில், நீண்ட காலதாமதம் ஏற்படுவதாகவும், அலைக்கழிப்பதாகவும், சுகாதார காப்பீடு அட்டை பெரும்பாலானாருக்கு வழங்கவில்லை எனவும், ஓய்வூதியதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமா அல்லது நிதி பற்றாக்குறை காரணமா எனத் தெரியவில்லை. தற்போதுள்ள கணினி காலத்தில், இதைக்கூட செய்ய இயலாதது வேதனைக்குரியது. முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.