ADDED : பிப் 18, 2025 08:17 PM
சென்னை:''முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு கொசு. நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போது, கொசு குறித்து பேச நேரமில்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
பன்னீர்செல்வம் ஒரு கொசு. நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போது, கொசு குறித்து பேச நேரமில்லை. தேர்தலில் அ.தி.மு.க.,வை வெற்றிபெற வைக்கும் ரகசியம், தன்னிடம் உள்ளதாக கூறியிருக்கிறார். 'நீட்' தேர்வை விலக்கும் ரகசியம் உள்ளது என, உதயநிதி கூறினார். தி.மு.க.,வுடன் கள்ளத்தொடர்பு வைத்ததால், அந்த நோய் அவருக்கும் தொற்றி விட்டது. ரகசியம் எனக் கூறி, தொண்டர்களை ஏமாற்ற பார்க்கிறார். அவரது ஏமாற்று வேலை, அ.தி.மு.க., தொண்டர்களிடம் எடுபடாது.
தமிழ் என்பது தமிழர்களின் இரு கண்கள். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் இருமொழிக் கொள்கையை பழனிசாமி பின்பற்றி வருகிறார். இருமொழிக் கொள்கை தான் அ.தி.மு.க.,வின் கொள்கை. விரும்புவோர் ஹிந்தி உட்பட எந்த மொழியையும் கற்கலாம். ஆனால், ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது. தமிழகத்தில் தமிழ் முதன்மை மொழி. ஆங்கிலம் இணைப்பு மொழி. இதை மாற்றி ஹிந்தி திணிக்கப்படுவதை, தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
மத்திய பா.ஜ., அரசு நிதி ஒதுக்கீட்டில், ஒரு கண்ணில் வெண்ணை, மறு கண்ணில் சுண்ணாம்பு வைக்கிறது. தமிழகத்திற்கு நிதி கேட்டால் மறுக்கிறது. குஜராத்திற்கு கொடுக்கின்றனர். மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என சொல்வது, அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல்.
கடந்த 2026க்கு பிறகு. மத்திய அரசில் சேர தி.மு.க., தரப்பில் பேசி முடித்து விட்டனர். அதனால், மத்திய அரசை பெயரளவில் எதிர்ப்பது போல எதிர்த்து, நாடகமாடுகின்றனர். தமிழகத்தின் உரிமைகளை, அ.தி.மு.க., ஒருபோதும் விட்டு கொடுக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

