பாராசிட்டமால் மாத்திரை தயக்கமின்றி சாப்பிடலாம் மருந்து கட்டுப்பாட்டு துறை தகவல்
பாராசிட்டமால் மாத்திரை தயக்கமின்றி சாப்பிடலாம் மருந்து கட்டுப்பாட்டு துறை தகவல்
ADDED : ஜூன் 28, 2025 07:13 PM
சென்னை:'தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எவ்வித குறைபாடும் இல்லை' என, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகா மாநிலத்தில், பாராசிட்டமால் -650 எம்.ஜி., மருந்துகளில், சில அட்டைகள் உரிய தரத்தில் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், உடல்வலி பாதிப்புகளுக்கு, பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் இம்மருந்தில், தரம் குறைவாக இருப்பது, பொது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும், விமர்சனங்களையும் எழுப்பியது.
கர்நாடகாவை போல, தமிழகத்திலும் தரமற்ற மருந்துகள் விற்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், மருந்தகங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளை, வர்த்தக நடவடிக்கைகளை, மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கண்காணித்து வருகிறது. தரமற்ற மருந்துகள் இருந்தால், சந்தையில் இருந்து நீக்கப்பட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கர்நாடகாவில் கண்டறியப்பட்டதில், சில மருந்துகள் மட்டுமே தரமற்றவையாக இருந்தன. அனைத்து பாராசிட்டமால் மருந்துகளிலும் அத்தகைய நிலை இல்லை.
தமிழகத்தில் கூட காய்ச்சலுக்கான மருந்துகள் சிலவற்றில் தரக்குறைபாடு இருந்ததை கண்டறிந்து, தீர்வு காணப்பட்டது. எனவே, பொதுமக்கள், பாராசிட்டமால் மருந்தில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. அதேநேரம்,எவ்வகை மருந்தாக இருந்தாலும் டாக்டரின் பரிந்துரையுடன் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.