பரந்துார், ஓசூர் ஏர்போர்ட் மத்திய அரசிடம் முதல்வர் பேச்சு
பரந்துார், ஓசூர் ஏர்போர்ட் மத்திய அரசிடம் முதல்வர் பேச்சு
ADDED : டிச 28, 2024 08:54 PM
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், புதிய விமான நிலைய திட்டங்களுக்கு விரைந்து அனுமதி அளிக்குமாறு, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 3,750 ஏக்கர் கையகப்படுத்தும் பணி நடக்கிறது.
இந்த விமான நிலைய இடம் தேர்வுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைதொடர்ந்து திட்ட அனுமதிக்கு, 'டிட்கோ' எனப்படும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.
பரந்துார் விமான நிலைய முதல் கட்ட கட்டுமான பணியை, 2026ல் துவக்கி, 2028ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் ஓசூர் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, விமான நிலைய ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
அதில் ஆணையம் தெரிவிக்கும் ஒரு இடத்தில், விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் டில்லியில் இருந்த முதல்வர் ஸ்டாலினை, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, பரந்துார், ஓசூர் விமான நிலைய பணிகளை விரைவில் துவங்குவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.