பகுதி நேர ஆசிரியர்கள் பணி மாறுதல் கண்துடைப்பே: சங்கத்தினர் கொதிப்பு
பகுதி நேர ஆசிரியர்கள் பணி மாறுதல் கண்துடைப்பே: சங்கத்தினர் கொதிப்பு
ADDED : டிச 31, 2024 05:11 AM

சிவகங்கை : தமிழகத்தில் நேற்று நடந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் நியமனம் கண் துடைப்பாக நடத்தப்பட்டதாக, ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
காட்டப்படவில்லை
சிவகங்கையில் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் யுவராஜ் கூறியதாவது:
பகுதி நேர ஆசிரியர்களுக்கு விருப்ப மாறுதல் கலந்தாய்வு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குனர் அறிவுறுத்தலில், நேற்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடந்தது.
இந்த பணி மாறுதலை முதலில் அந்தந்த மாவட்டத்திற்குள்ளும், பின் மாவட்டம் விட்டு மாவட்டமும் அதைத்தொடர்ந்து மனம் ஒத்த மாறுதலும் நடத்த வேண்டும்.
நுாறு மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த மாறுதலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மன வளர்ச்சி குன்றியோரின் பெற்றோர், அறுவை சிகிச்சை செய்தோர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நேற்று நடந்த கலந்தாய்வில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகள் கலந்தாய்வில் காட்டப்படவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், குறைவான இடங்களை மட்டுமே காண்பித்ததால், பணி மாறுதலில் செல்வதில் குழப்பம் ஏற்பட்டது.
மன உளைச்சல்
இது பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இப்பணி மாறுதல் கலந்தாய்வு கண் துடைப்பிற்காக நடத்தப்பட்ட கலந்தாய்வு.
பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் இந்த அரசால் மன உளைச்சலுடன் இருக்கிறோம். தி.மு.க., அரசு தற்போது வரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றார்.