'ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு!'
'ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு!'
ADDED : செப் 24, 2024 07:01 PM
சென்னை:''அமைச்சர் உதயநிதியை விமர்சிப்பதை கட்சி ஏற்றுக் கொள்ளாது. தனி நபர்களை விமர்சிப்பதை ஆதரிக்கவும் செய்யாது. அதே சமயம், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னியரசு கூறினார்.
அவரது பேட்டி:
தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, 2021ம் ஆண்டின் சட்டசபை தேர்தலை சந்தித்தன. பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகளை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இத்தனை கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தோம்.
வட மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியை பிடித்த சூழலில், தமிழகத்தில் அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தி.மு.க., கூட்டணியில் இணைந்தோம்.
எங்களுக்கு 6 தொகுதிகளை கொடுத்தாலும், இடங்கள் முக்கியமல்ல, இலக்கு தான் முக்கியம் என, சேர்ந்தோம். நாங்கள் பெற்ற வெற்றிக்கு, தி.மு.க.,வின் ஓட்டு மட்டுமல்லாது, கூட்டணி கட்சிகளின் ஓட்டுக்களும் காரணம். இது எங்களுக்கு மட்டுமல்ல, கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.
நாங்கள் இல்லாமல் வெற்றி பெற முடியாது என சொல்வது கூட்டு முயற்சியின் பின்னடைவாகத் தான் பார்க்க முடியும். ஒரு கூட்டணி அமைத்து, புரிந்துணர்வு ஏற்பட்டு ஓட்டுக்களை பெற்று இருக்கிறோம். எனவே, விடுதலை சிறுத்தைகளின் வெற்றியில், இடதுசாரிகளின் பங்கு இருக்கிறது. தி.மு.க.,வின் வெற்றியில் வி.சி., பங்கு இருக்கிறது.
இந்த வெற்றி என்பது எல்லாரும் சேர்ந்து எடுத்த வெற்றியாக தான் பார்க்கிறோம்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது கட்சியின் இலக்கு. எங்கள் கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு விரும்புகிறோம். திருமாவளவன் முதல்வராக வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் கட்சியை துவக்கியுள்ளளோம். அந்த அடிப்படையில் தான் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்ற, கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் தான் தொடர்கிறோம். திருமாவளவனும் இதை உறுதிப்படுத்திருக்கிறார். வட மாவட்டங்களில் வி.சி., இல்லாமல் தி.மு.க., வெல்ல முடியாது என, எங்கள் கட்சி துணை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து ஏற்புடையதல்ல. அது அவருடைய சொந்தக் கருத்து. அமைச்சர் உதயநிதியை அவர் விமர்சித்ததையும் கட்சி ஏற்றுக் கொள்ளாது. தனிநபர்களை விமர்சிப்பதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.
அதேநேரத்தில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது கட்சியின் கோட்பாடு, நிலைப்பாடு. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.