ADDED : செப் 16, 2025 03:45 AM

விஜயுடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ், அ.ம.மு.க., புதிய தமிழகம், ஐ.ஜே.கே., உள்ளிட்ட கட்சிகள் ஆர்வம் காட்டுவதாக த.வெ.க., தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது:
த.வெ.க.,வை துவக்கிய இரண்டு ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை, திருச்சி, அரியலுாரில், நடிகர் விஜய் துவக்கினார். பொது மக்களும், தொண்டர்களும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விஜய்க்கு கூடிய கூட்டம் திருச்சி, அரியலுாரை ஸ்தம்பிக்க வைத்தது. பெரம்பலுாரில் ஏராளமானோர் திரண்டிருந்தும், பிரசாரத்திற்கு செல்ல முடியாமல் விஜய் சென்னை திரும்பினார்.
முதல் சுற்றுப்பயணத்தில் மக்களிடம் எழுந்த எழுச்சி, தி.மு.க., வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால், விஜய் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கும் நிலை ஏற்பட்டது.
விஜய்க்கு கூடிய மக்கள் கூட்டத்தை கண்டு, தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் எண்ண ஓட்டமும் மாறியுள்ளது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், 'கூட்டணி ஆட்சி என்கிற விஜயின் கருத்தை வரவேற்கிறோம்.
தமிழகத்திற்கு அது தேவையான ஒன்று. விஜயை அடக்க நினைக்கும்போது, அவரது வளர்ச்சி அதிகமாகுமே தவிர குறையாது' என்றார். அவரது கருத்தில் இருந்து, அவர் எங்களுடன் கூட்டணி சேர ஆர்வமாக இருப்பதாக கருதுகிறோம்.
திருச்சி பிரசாரத்துக்கு பின், ஐ.ஜே.கே., தலைவர் பாரிவேந்தர், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். அக்கட்சியும் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது.
அ.ம.மு.க., தலைவர் தினகரனும், விஜயை புகழும் வகையில், 'விஜய் பிரசாரத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் திரண்டிருந்தனர். விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி உருவாகும்' என கூறியுள்ளார். எங்களுடன் அ.ம.மு.க., கூட்டணி அமைக்கவும் தயாராக இருப்பதாகவே கருதுகிறோம்.
கூட்டணி ஆட்சி என்ற நெருக்கடியை தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் கொடுத்து வருகிறது. இதற்கு, தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு இருக்கும்பட்சத்தில், விஜய் பக்கம் போகலாம் என்றும் கட்சித் தலைமைக்கு ஆலோசனை கூறி வருகின்றனர், சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் அக்கட்சி மாநில நிர்வாகிகள்.
இன்றைய அரசியல் சூழல் இப்படித்தான் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

