தி.மு.க.,வை எதிர்க்கும் கட்சிகள் தே.ஜ.கூட்டணிக்கு வரவேண்டும்: அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் அழைப்பு
தி.மு.க.,வை எதிர்க்கும் கட்சிகள் தே.ஜ.கூட்டணிக்கு வரவேண்டும்: அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் அழைப்பு
ADDED : பிப் 03, 2025 04:46 AM

சிவகாசி; ''தி.மு.க.,வை எதிர்க்கும் கட்சிகள் தனித்து நின்று ஓட்டுகளை சிதறடிக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும்'' என சிவகாசியில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மதுரை டங்ஸ்டன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த உடன், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை டில்லிக்கு விவசாயிகளை அழைத்து சென்று சம்பந்தபட்ட துறை அமைச்சரை சந்திக்க வைத்ததால் மத்திய அரசு அத்திட்டத்தை ரத்து செய்து உள்ளது. அத்திட்டம் குறித்து கருத்து கேட்ட போதே வேண்டாம் என்று சொல்லாமல் ஒப்புதல் அளித்த முதல்வர் ஸ்டாலின், திட்டம் ரத்தாக நாங்கள் தான் காரணம் எனக் கூறுவது கேலிக் கூத்து.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் எனக் கூறி தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில் போதைப் பொருட்கள் புழக்கத்தால் இளைஞர்களை கூலிப்படையினராக உருவாகி வருகின்றனர். தி.மு.க., அரசின் தவறுகளை மறைக்கவே கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசை குறை கூறி வருகின்றனர்.
தி.மு.க.,வின் அராஜக ஆட்சிக்கு எதிராக அரசியல் செய்யும் அனைவரும் தனித்தனியாக நின்று தங்களது ஓட்டுக்களை சிதறடிக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும். ஸ்டாலின் குடும்பம் சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தமிழகத்தில் அரசியல் செய்வதற்காக பா.ஜ., மதவாத கட்சி என தி.மு.க., கூறி வருகிறது.
பா.ஜ., மதவாத கட்சி என்றால், தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாத தி.மு.க., ஹிந்து விரோத கட்சியா. பழனிசாமி போன்ற ஒரு சிலர் தங்களின் சுயநலத்திற்காக தனித்து நின்று தி.மு.க., வுக்கு வெற்றி பெற உதவி புரிகின்றனர் என்றார்.

