மூன்று துறைகள் மூடப்பட்டதற்கு கட்சி தலைவர்கள் கண்டனம்
மூன்று துறைகள் மூடப்பட்டதற்கு கட்சி தலைவர்கள் கண்டனம்
ADDED : நவ 18, 2024 01:12 AM

சென்னை: தமிழகத்தில் ஓய்வூதிய இயக்குனரகம், அரசு தகவல் தொகுப்பு விபர மையம், சிறு சேமிப்பு இயக்குனரகம் போன்றவை, கருவூலங்கள் கணக்கு துறையுடன் இணைக்கப்பட்டதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம்:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
தமிழகத்தில் தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த, ஓய்வூதிய இயக்குனரகம், அரசு தகவல் தொகுப்பு விபர மையம், சிறு சேமிப்பு இயக்குனரகம் ஆகியவை கலைக்கப்பட்டு, அவற்றின் தலைமை பதவிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. மூன்று துறைகளும் தமிழ்நாடு கருவூலங்கள் கணக்கு துறையுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் வழியே, தமிழக அரசு சொல்லாமல் சொல்லி இருக்கும் செய்தி, தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படாது என்பதே. அரசு ஊழியர்களை பொறுத்தவரை, இது, மிகவும் கசப்பான செய்தி.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த போவதாக வாக்குறுதி அளித்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அதை செயல்படுத்த, ஓய்வூதிய இயக்குனரகம் தனி அமைப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்:
தமிழக அரசு மூன்று துறைகளுக்கு மூடுவிழா நடத்தி அரசாணை பிறப்பித்துள்ளது, பொதுமக்கள் இடையே, குறிப்பாக அரசு ஊழியர்கள் இடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., அரசின் இச்செயலால், அரசு வேலைவாய்ப்புகள் இனி உருவாக்கப்படாது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம், இனி கானல் நீர் என்பது தெளிவாகியுள்ளது. மொத்தத்தில், தி.மு.க., அரசு சமூக நீதிக்கு மூடுவிழா நடத்தி உள்ளது. முதல்வருக்கு, உண்மையிலேயே சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற அக்கறை இருந்தால், மூன்று துறைகளுக்கு மூடுவிழா நடத்த பிறப்பித்த ஆணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்:
ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்காக செயல்பட்டு வந்த, ஓய்வூதிய இயக்குனரகத்திற்கு மூடுவிழா நடத்தி இருப்பது கண்டனத்திற்குரியது.
மறுசீரமைப்பு என்ற பெயரில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான விரோத போக்கை, தி.மு.க., அரசு கைவிட வேண்டும். ஓய்வூதிய இயக்குனரகத்திற்கு மூடுவிழா நடத்தும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையை, உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு கூறி உள்ளனர்.