அதிருப்தி மாவட்ட தலைவர்களுக்கு கட்சி தலைமை கெடு விதிப்பு
அதிருப்தி மாவட்ட தலைவர்களுக்கு கட்சி தலைமை கெடு விதிப்பு
ADDED : மே 13, 2025 12:36 AM

சென்னை : கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை இம்மாதம் 31க்குள் முடிக்குமாறு, அதிருப்தி மாவட்ட தலைவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைமை கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த, கிராமங்கள் தோறும் கமிட்டிகள் அமைக்கப்படுகின்றன. மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், லோக்சபா தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் நேரில் சென்று, கிராம கமிட்டிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம், திருப்பூர் தெற்கு, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில், இதற்கான நிர்வாகிகள் நியமன பணிகள் முடிக்கப்படவில்லை. அந்த மாவட்ட தலைவர்கள், இதற்கு எதிர்ப்பு கொடி துாக்கி உள்ளதால், அங்கு கிராம கமிட்டிகள் அமைக்கப்படவில்லை.
இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்காக, கிராம காங்கிரஸ் கமிட்டி சீரமைப்பு குழு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் லோக்சபா பொறுப்பாளர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.
மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். கிராம காங்கிரஸ் சீரமைப்பு மேலாண்மைக் குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்திலுள்ள 12,425 கிராம ஊராட்சிகளிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதேபோல், 138 நகராட்சிகள் மற்றும் 25 மாநகராட்சிகளிலும் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்.
இந்த பணிகளை, அதிருப்தி மாவட்ட தலைவர்கள் சிலர் முழுமையாக நடத்தி முடிக்கவில்லை. அவர்கள் அனைவரும், நிர்வாகிகள் நியமனம் பட்டியலை, வரும் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என, கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.