'விஜயகாந்த் மகன் நடிக்கணும்' பிரேமலதாவுக்கு கட்சியினர் அழுத்தம்
'விஜயகாந்த் மகன் நடிக்கணும்' பிரேமலதாவுக்கு கட்சியினர் அழுத்தம்
ADDED : ஜூன் 19, 2025 01:23 AM
சென்னை: 'விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை, தொடர்ந்து நடிக்க வைத்து கட்சியை வளர்க்க வேண்டும்' என, தே.மு.தி.க., கூட்டத்தில், நிர்வாகிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க., ராஜ்யசபா எம்.பி., சீட்டை எதிர்பார்த்தது. அ.தி.மு.க., தலைமை அதை மறுத்துவிட்டது.
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கூட்டணி குறித்து, 2026 ஜனவரி மாதம், கடலுாரில் நடக்கும் மாநாட்டில் முடிவு செய்யப்படும் என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா திட்டவட்டமாக கூறிவிட்டார்.
வட மாவட்டங்களில், த.வெ.க.,விற்கு கிடைக்கும் ஓட்டுகளை கைப்பற்ற, தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுக்க, தி.மு.க.,வும் காய் நகர்த்தி வருகிறது. இந்நிலையில், தே.மு.தி.க.,விற்கு 234 சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் பொறுப்பாளர்களை பிரேமலதா நியமித்துள்ளார். மண்டல பொறுப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுடன், சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பிரேமலதா தொடர் ஆலோசனையில்  ஈடுபட்டு வருகிறார். இந்த கூட்டத்தில், கட்சியை வளர்ப்பதற்கு தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர் புதிய யோசனையை கூறியுள்ளனர்.
இதுகுறித்து தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
விஜயகாந்த் மறைவுக்கு பின், கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பொதுச்செயலராக பிரேமலதா பொறுப்பேற்று, கட்சி பணிகளை கவனித்து வருகிறார். மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கு, இளைஞர் அணி செயலர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
இளைய மகன் சண்முகபாண்டியனை, மிகப்பெரிய நடிகராக்க வேண்டும் என விஜயகாந்த் விரும்பினார். ஆனால், அவர் நடித்த இரண்டு படங்களும் பெரிய அளவில் பேசப்படவில்லை.
இப்போது அவர் நடிப்பில் வெளிவந்துள்ள, படைத்தலைவன் படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கட்சியினரும் உற்சாகமாக படத்தை பார்த்து வருகின்றனர்.
சண்முகபாண்டியனை தொடர்ந்து படத்தில் நடிக்க வைத்தால், அதன் வாயிலாக கட்சிக்கு விளம்பரம் கிடைக்கும். மக்கள் மத்தியில், தே.மு.தி.க., மீண்டும் எழுச்சி பெறும். பிற்காலத்தில் கட்சியின் கொள்கைபரப்பு செயலராக, சண்முகபாண்டியனை நியமிக்கலாம்.
இவ்வாறு பல யோசனைகளை, பிரேமலதாவிடம் நிர்வாகிகள் கூறியுள்ளனர். சண்முகபாண்டியன் நடிப்பில் தொடர்ந்து படம் எடுக்கவும், வெளியிடவும், மாவட்டச் செயலர்கள் உதவ வேண்டும் என, பிரேமலதா கேட்டுள்ளார்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

