தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மெட்ரோ ரயிலில் குறைந்தது பயணிகள் கூட்டம்: யோசிக்க வைக்கிறதா கட்டணம்?

மெட்ரோ ரயிலில் குறைந்தது பயணிகள் கூட்டம்: யோசிக்க வைக்கிறதா கட்டணம்?

மெட்ரோ ரயிலில் குறைந்தது பயணிகள் கூட்டம்: யோசிக்க வைக்கிறதா கட்டணம்?


ADDED : ஜூலை 01, 2015 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2015 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெட்ரோ ரயில்களில், துவக்கப்பட்ட முதல் நாளில், ரயிலில் ஏறவே முடியாத அளவிற்கு, ரயில் நிலையங்களில் கூட்டம் குவிந்தது. ஆனால், இரண்டாம் நாளான நேற்று கூட்டம் குறைந்து காணப்பட்டது.

சென்னைவாசிகளின் கனவான மெட்ரோ ரயிலில் பயணிக்க, துவக்க நாளான நேற்று, முன்தினம், பயணிகள் கூட்டம் குவிந்தது. இந்த நிலையில், நேற்று மெட்ரோ ரயிலில் பயணிக்க பலரும் ஆர்வமுடன் வந்தனர். பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையம், ஆலந்துார் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் ஓரளவு பயணிகள் கூட்டத்தை பார்க்க முடிந்தது.

தொடரும் ஈர்ப்பு:

அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காடுத்தாங்கல் உள்ளிட்ட மற்ற ரயில் நிலையங்களில், மிகமிக குறைவான பயணிகளே ரயிலுக்கு காத்திருந்ததை பார்க்க முடிந்தது. ரயிலில் நின்று கொண்டு பயணிப்போர் எண்ணிக்கையும், விரல்விட்டு எண்ணி விடும் அளவில் தான் இருந்தது. கடந்த இருநாட்களிலுமே, மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில், சுற்றுலா செல்வது போல வந்தவர்கள் தான் அதிகம். வித்தியாசமான பயண அனுபவம், சென்னையின் மற்றொரு அடையாளம், 'ஹாலிவுட்' படங்களில் மட்டுமே பார்த்த ரயில்களை நேரில் பார்க்க போகிறோம் என்ற உற்சாகம் ஆகியவை தான், பயணிகளை அதிகளவில் ஈர்க்கின்றன.ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையமும் உயர்தரத்தில், கண்ணுக்கு அழகாகவும், மிக துாய்மையாகவும், விமான நிலையங்களின் அளவுக்கு பளபளப்பாக இருப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

என்ன காரணம்?

இரண்டாவது நாளான நேற்று கூட்டம் குறைந்ததற்கு, முதல் காரணமாக கட்டணம் தான் கூறப்படுகிறது. '4௦ ரூபாயா?' என்ற கேள்வி, அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் எழுவதை, நேரில் காண முடிகிறது.

தாம்பரம் உள்ளிட்ட தெற்கு பகுதிகளில் இருந்து, இருசக்கர வாகனம், பேருந்துகளில் வருவோர், ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எளிதில் செல்ல முடியும்.ஆனால், போரூர் உள்ளிட்ட மேற்கு பகுதிகளில் இருந்து, இருசக்கர வாகனங்கள், பேருந்துகளில் வருவோர், நீண்ட துாரம் சுற்றிக் கொண்டு, ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து சேர வேண்டியிருக்கிறது. இது இரண்டாவது காரணமாக கூறப்படுகிறது.மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டிய, உட்புறங்களுக்கு செல்லும் சிற்றுந்துகளின் வழித்தடங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் செல்லும்படியாக மாற்றாதது, மூன்றாவது காரணமாக கூறப்படுகிறது.மேலும், நேற்று மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் காய்கறி மூட்டை, உள்ளிட்ட சரக்குகள் எதையும் எடுத்துச் ெசல்லவில்லை.

40 ஆயிரம் பேர்:

மாநகரில், நேற்று முன்தினம், ஆலந்துார் - கோயம்பேடு இடையே, மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கியது. அன்று நண்பகல், 12:14 மணிக்கு மெட்ரோ ரயில் ஓடத் துவங்கியது. இரவு, 1௦:௦௦ மணி வரை, இருவழித்தடங்களிலும் ரயில்கள் இயங்கின. மொத்தம், 109 நடைகள் இயக்கப்பட்டன; 40 ஆயிரம் பேர் பயணித்தனர்; 16.77 லட்சம் ரூபாய், வருவாயாக கிடைத்தது. அதிகபட்சமாக, ஆலந்துார் ரயில் நிலையத்தில், 5.5 லட்சம் ரூபாயும், குறைந்தபட்சமாக, ஈக்காடுத்தாங்கல் ரயில் நிலையத்தில், ஒரு லட்சம் ரூபாயும் வருவாய் ஈட்டப்பட்டது.

ஐ.டி., ஊழியர்களை கவருமா?

சென்னை, மெட்ரோ ரயில் சேவை, தகவல் தொழில்நுட்பத் துறையினரை பெரிதும் கவர வாய்ப்புள்ளது. மெட்ரோ ரயிலில் அன்றாடம் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் என்று பார்த்தால், 100 அடி சாலை வழிநெடுகிலும் அமைந்துள்ள, முக்கிய, ஐ.டி., நிறுவனங்களின் ஊழியர்களை, குறிப்பிடலாம். அவர்களுக்கு, கட்டணத்தை சற்று குறைத்து, மாதாந்திர, அல்லது காலாண்டு அடிப்படையில் 'சீசன் டிக்கெட்' வழங்கினால், மெட்ரோ ரயிலுக்கு, வருவாய் அதிகரிக்க, வாய்ப்பு உண்டு.மேலும், 100 அடி சாலை நெடுகிலும் அமைந்துள்ள, ஐ.டி., நிறுவனங்களின், இரவுப் பணி நேரத்தையும், திரையரங்கு, மருத்துவமனைகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, விரிவாக, ஆய்வு செய்து, அதற்கேற்ப, ரயில் சேவைகளை, அறிமுகப்படுத்தினால், நிச்சயம், லாபகரமாக அமையும்.

'ஸ்மார்ட் கார்டு' சலுகை கட்டணம்:

* 100 ரூபாய் செலுத்தி பெறப்படும் அந்த கார்டில், 50 ரூபாயை பயண கட்டணமாக பயன்படுத்த முடியும்.

* கார்டில், 3,000 ரூபாய் வரை, தானியங்கி இயந்திரத்திலேயே 'ரீசார்ஜ்' செய்து கொள்ளலாம்.

* அந்த கார்டை, வாங்கியவர் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. மாறாக, கார்டில் பணம் இருந்தால், யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

* தேவைப்பட்டால் கார்டை, டிக்கெட் வழங்கும் மையத்தில் திரும்ப தந்து விட்டு, கார்டில் இருக்கும் பணத்தை, திரும்ப பெற முடியும்.

* டோக்கன் வாங்கி பயணிக்கும் போது சலுகை இல்லை. அதேநேரம், கார்டு வாங்கி பயணித்தால், 10 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது.

* சுற்றுலா கார்டு, குரூப் கார்டு, வங்கி கார்டு, பேருந்து மற்றும் ரயிலில் பயணிப்பதற்கு ஒரே கார்டு என, நான்கு வகையான கார்டு கள் விரைவில் வர உள்ளன.

நகை வேண்டாம்:

பயணிகள் கொண்டு செல்லும் கைப்பை, 'ஸ்கேனிங்' இயந்திரம் மூலம், பரிசோதிக்கப்படுகிறது. பைக்குள் எந்த பொருள் இருந்தாலும், அது கணினியில் தெரிந்து விடும். பணம், நகை எடுத்து செல்வதை, கணினியில் பார்த்து அந்த நபர், பின்தொடர்ந்து பறிக்க வாய்ப்புள்ளது. அதனால், நகை, பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பையில் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர், மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர்.

'செல்பி'க்கு தடை:

மெட்ரோ ரயில் நிலையத்தை பார்த்து, ரயிலில் பயணிக்க, 12 பேர் வந்தோம். குழுவாக 'செல்பி' எடுக்க முயன்றபோது ஊழியர்கள் தடுத்தனர். ஒரு வாரம் வரை கேமரா பயன்படுத்த அனுமதித்திருக்கலாம்.

கிருஷ்ணன்,

ஐ.ஐ.டி., பேராசிரியர்

கதவு திறக்காததால் பயணிகள் அச்சம்:

சென்னையில் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயில் கதவு திறக்காததால், பயணிகள் அச்சம் அடைந்தனர்.ஆலந்துார் - கோயம்பேடு வழித்தடத்தில் நேற்று காலை புறப்பட்ட ரயில், காலை, 11:20 மணிக்கு, சி.எம்.பி.டி., பேருந்து நிலையத்தில் நின்றது. அப்போது, ரயிலில் ஏற சில பயணிகளும், நிலையத்தில் இறங்க, ரயிலின் உள்ளே பல பயணிகளும் நின்றிருந்தனர். ஆனால், தானியங்கி கதவு திறக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து திறக்கும் என, பயணிகள் காத்திருந்தனர்.

ஆனால், 30 வினாடிகள் நின்ற ரயில், கதவை திறக்காமலே நகர்ந்தது. இதனால், ரயிலிலிருந்து இறங்க வேண்டிய பயணிகள், அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சி.எம்.பி.டி.,யில் இறங்க வேண்டிய பயணிகள், கோயம்பேடு சென்றனர்.பின்னர், அங்கிருந்து சி.எம்.பி.டி.,க்கு மற்றொரு ரயில் மூலம் திரும்பி வந்தனர்.

உடனடியாக செய்ய வேண்டியவை:

* ஆலந்துார் ரயில் நிலையத்தில், ஒரு தானியங்கி இயந்திரத்தில், பயண டோக்கன் வந்தது; ஆனால் ரசீது வரவில்லை.

* அங்கு, தரைதளத்தில் கழிப்பறை வசதி உள்ளது. ரயில் நிற்கும் நடைமேடை அருகே, சிறுநீர் கழிப்பறை வசதி வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.

* வாகன பாதுகாப்பு இடம் குறித்த அறிவிப்பு பலகை இல்லை.

* ஒரு நகரும் படிக்கட்டு இயங்கவில்லை

* கோயம்பேடு, சி.எம்.பி.டி., அரும்பாக்கம், வடபழனி, ஈக்காடுத்தாங்கல் ரயில் நிலையங்களில், பயணிகளுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்படவில்லை

* கோயம்பேடு, அரும்பாக்கத்தில், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி உள்ளது; மேற்கூரை இல்லை; அதற்குள், வாகனம் நிறுத்த, கட்டணம்

வசூலிக்கப்படுகிறது.

* வடபழனி ரயில் நிலையத்தில், வாகன நிறுத்துமிடத்தில் பணிகள் நடந்து வருகின்றனர்.

* கோயம்பேடு, சி.எம்.பி.டி., அரும்பாக்கம், வடபழனி போன்ற ரயில் நிலையங்களில், பயணி கள் அமர, இருக்கை வசதிகள் இல்லை.

* கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனியில், இரு தானியங்கி இயந்திரங்களில் ஒன்று, அடிக்கடி, 'அவுட் ஆப் சர்வீஸ்' என, காட்டின. ஊழியர்கள் கூறுகையில், 'இயந்திரத்தில், டோக்கன்கள் நிரப்பும் பணி நடைபெறுவதால், அப்படி காட்டுகிறது. சிறிது நேரத்தில் சரியாகி விடும்' என்றனர். ஆனால், ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும், இயந்திரம் பயன்பாட்டிற்கு வரவில்லை.

மெட்ரோ ரயிலில் ஏறுவதற்காக சி.எம்.பி.டி., நிலையத்தில் நின்றிருந்தேன். ஆனால், தானியங்கி கதவு திறக்காததால், ரயிலில் ஏற முடியவில்லை. இறங்க வேண்டிய பயணிகள் வேறு வழியில்லாமல், கோயம்பேடு சென்று திரும்பினர். இதனால், பயம் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டது. 10 நிமிடம் கழித்து, நான் அடுத்த ரயிலில் ஏறி சென்றேன். பயண கட்டணம் அதிகம் இருக்கும் நிலையில், இதுபோன்ற நிர்வாக பிரச்னைகளுக்கு, பயணிகள் கட்டணம் செலுத்துவது நியாயமில்லை.

நாராயணன்,

திருப்போரூர்

- நமது நிருபர் குழு -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us