UPDATED : அக் 26, 2026 09:16 PM
ADDED : அக் 26, 2026 07:48 PM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டடம் கட்டப்பட்டு, 40 ஆண்டுகள் ஆன நிலையில், கட்டடம் மற்றும் துாண்களில் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழத்தொடங்கின.
இதையடுத்து, பயணியர் பாதுகாப்பு கருதி பஸ் ஸ்டாண்ட் கட்டடம் கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது. நவீன வசதிகளுடன் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டடம் கட்டுமான பணிக்காக, 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் ஒரு பகுதி இப்போது தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்பட்டு வருகிறது.
இந்த இடம் மண் தரை என்பதால் மேடு, பள்ளமாக உள்ளதுடன், மழை பெய்தால் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது, வடகிழக்கு பருவமழை, ஒரு வாரமாக பெய்து வருகிறது. இதனால், பஸ் ஸ்டாண்ட் சேறும், சகதியுமாக மாறிவிட்டதால் பயணியர், டிரைவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
மேலும், சேற்றில் வழுக்கி பயணியர் தடுமாறி விழும் நிலை உள்ளது. பெண்கள் அவ்வப்போது தடுமாறி விழுந்து வருகின்றனர். மழைநீர் தேங்காமல் தடுக்கவும், புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
