வாடிக்கையாளர் சேவை எண் 'பிஸி' 'ஏர் இந்தியா' மீது பயணியர் புகார்
வாடிக்கையாளர் சேவை எண் 'பிஸி' 'ஏர் இந்தியா' மீது பயணியர் புகார்
ADDED : ஜூன் 19, 2025 11:33 PM

சென்னை:'ஏர் இந்தியா' நிறுவனத்தின் பயணியர் வாடிக்கையாளர் சேவை எண்ணில் தொடர்பு கொண்டால், அழைப்புகளை ஊழியர்கள் ஏற்க மறுக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.
தொழில்நுட்ப பிரச்னை
இம்மாதம் 12ம் தேதி, குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் 241 பேர் இறந்தனர். இது ஏர் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்நிறுவனம் இயக்கும் குறிப்பிட்ட சில வகை விமானங்களில், தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இதனால், 85க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில், பலருக்கு முறையாக பணம் திரும்ப வரவில்லை. வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமான சேவைகளில், 15 சதவீதம் வரை குறைப்பதாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
சரியான பதில்
இதன் காரணமாக, அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணில் பயணியர் தொடர்பு கொண்டு, பயண விபரம் குறித்து அறிந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.
ஆனால், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்கள், சரியாக வேலை செய்வதில்லை. ஊழியர்கள் அழைப்பை ஏற்றாலும், சரியான பதில் தராமல் இழுத்தடிக்கின்றனர் என, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்னையில், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தலையீட்டு தீர்வு காண வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.