மைசூரு - துாத்துக்குடி ரயிலுக்கு இணைப்பு கிடைக்க ரயில்கள்; பயணிகள் எதிர்பார்ப்பு
மைசூரு - துாத்துக்குடி ரயிலுக்கு இணைப்பு கிடைக்க ரயில்கள்; பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 05, 2025 10:38 PM

மதுரை; மைசூரு - துாத்துக்குடி - மைசூரு ரயில்களுக்கு காலை, மாலையில் இணைப்பு கிடைக்கும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என விருதுநகர், தென்காசி மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தென்காசி, ராஜபாளையம், சிவகாசி பகுதி மக்கள் கல்வி, பணி சம்பந்தமாகபெங்களூரு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை செங்கோட்டை வழித்தடத்தில் இருந்து பெங்களூரு செல்ல நேரடி ரயில் இல்லை. தென்காசியை மையமாகக் கொண்டு பெங்களூருவிற்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இப்பகுதியினர் பெங்களூரு சென்று வர போதுமான இணைப்பு ரயில் வசதியும் இல்லை. துாத்துக்குடி விரைவு ரயில் (16236) தினமும் காலை 7:35 மணிக்கு மதுரை வருகிறது. செங்கோட்டை பாசஞ்சர் (56719) தினமும் காலை 7:25 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படுகிறது. மைசூரு விரைவு ரயில் (16235) தினமும் இரவு 7:13 மணிக்கு விருதுநகர் வருகிறது. செங்கோட்டையில் இருந்து வாரம் 3 நாட்கள் தாம்பரம் செல்லும் சிலம்பு ரயில் (20682) இரவு 7:23 மணிக்கு விருதுநகர் வருகிறது.
சில நிமிட இடைவெளியில் மைசூரு - துாத்துக்குடி ரயில்களை பயன்படுத்த முடியாமல் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி பகுதி மக்கள் பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது.
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் துணைத் தலைவர் சுரேஷ் கூறியதாவது: துாத்துக்குடி ரயில் மதுரை வருவதற்குள் செங்கோட்டை பாசஞ்சர் புறப்பட்டுவிடுகிறது. அதை சற்று தாமதப்படுத்தி அந்த ரயிலுக்கு இணைப்பு பெற செய்ய வேண்டும். மேலும் செங்கோட்டையில் இருந்துமாலை 5:10 மணிக்கு புறப்படும் சிலம்பு ரயிலை மாலை 4:30 மணிக்கு புறப்படும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் பெங்களூரு செல்லமைசூரு - துாத்துக்குடி ரயில்களுக்கு இரு மார்க்கங்களிலும் இணைப்பு கிடைக்கும் என்றார்.