ADDED : டிச 21, 2024 12:15 AM
சென்னை:திருச்சி விமான நிலையத்தில், 'ஏரோபிரிட்ஜ்' ஒதுக்கீடு செய்யாமல் பயணியரை அழைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சியில் இருந்து மும்பை செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம் நேற்று முன்தினம் புறப்பட தயாராக இருந்தது. பயணியர் பாதுகாப்பு சோதனைகளை முடித்து ஒதுக்கப்பட்ட, 'கேட்' பகுதியில் விமானத்திற்கு காத்திருந்தனர்.
பொதுவாக பெரிய ரக விமானங்களை இயக்கும் போது, 'ஏரோபிரிட்ஜ்' என்ற விமானத்தை இணைக்கும் பாலம் பயன்படுத்தப்படும், பயணியர் அதில் எளிமையாக ஏறி உள்ளே செல்லலாம்.
அதற்கு பதிலாக, 'ரீமோட் பே' எனப்படும், பஸ்சில் அழைத்து சென்று விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
'ஏரோபிரிட்ஜ்' செயல்பாட்டில் இருந்தும் பயன்படுத்தாதது, பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிலை தொடர்வதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'இண்டிகோ நிறுவனம் கேட்டதால் தான், ரீமோட் பே வசதி தரப்பட்டது, அவர்கள் கேட்டிருந்தால், ஏரோபிரிட்ஜ் வழங்கப்பட்டிருக்கும்' என்றனர்.