ADDED : ஆக 30, 2025 06:23 AM
கிருஷ்ணகிரி : அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து, பணம் பறித்து, கொன்று எரித்த, மதபோதகர், அவரது மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், அழகியபாண்டிபுரம் அடுத்த உக்கிரமன்னன் கோட்டையை சேர்ந்தவர் மிலன்சிங், 55; கிறிஸ்தவ மதபோதகர்; மாற்றுத்திறனாளி.
இவர் சலோமி, அவரது தங்கைகளான ஜெனிபர் ராணி, காந்திமதி ஆகிய மூன்று பேரை திருணம் செய்துள்ளார். அவர்கள் மிலன்சிங்கை பிரிந்து வசிக்கின்றனர்.
அதன் பின், அவரது வீட்டருகே வசித்து வந்த ஜீவிதா, 40, என்பவரை மிலன்சிங் நான்காவதாக திருமணம் செய்தார்.
கைது
மிலன்சிங், கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மத பிரசாரம் செய்து வந்தார். அப்போது, திருநெல்வேலி மாவட்டம், மலையன்குளம், ஜே.டி.நகரை சேர்ந்த அன்பு ஸ்டெல்லா, 23, என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
நர்சிங் முடித்த அவருக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 2015ல், 3 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இந்நிலையில், அன்பு ஸ்டெல்லா மாயமானார்.
அவரது பெற்றோர், திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் போலீசில் புகாரளித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தனர்.
அதே நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், எர்ரஹள்ளி அருகே தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், 2016 ஜன., 3ல் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது.
சடலத்தை மீட்டு காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தர்மபுரியில் தங்கியுள்ள மதபோதகர் மிலன்சிங், அன்பு ஸ்டெல்லாவை கொலை செய்து எரித்தது தெரிய வந்தது.
மிலன்சிங்கையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நான்காவது மனைவி ஜீவிதாவையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, அன்பு ஸ்டெல்லா மாயமான வழக்கு மற்றும் கொலை வழக்கை இணைத்து, 2016 அக்., 6ல், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி அரசு உத்தரவிட்டது.
விசாரணையில், மிலன்சிங், அன்பு ஸ்டெல்லாவை ஆசைவார்த்தை கூறி, 2015ல், தர்மபுரி அடுத்த வெண்ணம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து, அடைத்து வைத்துள்ளார்.
அபராதம்
தொடர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத அன்பு ஸ்டெல்லா, 2016 ஜன., 2ல், தன்னிடம் வாங்கிய, 3 லட்சம் ரூபாயை கேட்டு தகராறு செய்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில், அவரை மிலன்சிங் அடித்து கொன்றுள்ளார். பின், சடலத்தை நான்காவது மனைவி ஜீவிதாவுடன் சேர்ந்து எடுத்து வந்து சாலையோரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிந்தது.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இதை விசாரித்த நீதிபதி மிலன்சிங், ஜீவிதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜெயகுமார் ஆஜரானார்.