பசுபதிபாண்டியன் கொலை வழக்கு : ஓராண்டாக தேடப்படும் குற்றவாளி
பசுபதிபாண்டியன் கொலை வழக்கு : ஓராண்டாக தேடப்படும் குற்றவாளி
ADDED : ஜன 11, 2013 12:59 AM
திண்டுக்கல்: பசுபதிபாண்டியன் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சுபாஷ் பண்ணையாரை, ஓராண்டாக போலீசார் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன், 49, கடந்த 2012 ஜன., 10 ல், வீட்டிற்கு வெளியே அமர்ந்து இருந்தபோது, நான்கு பேர் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இவ்வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். செந்தில், மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி, அடைக்கலம் கொடுத்த நிர்மலா உட்பட 18 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் நடந்து வருகிறது.
இவ்வழக்கில், தொடர்புடையவர்கள் ஜாமின் பெற்று, போலீஸ் ஸ்டேஷன்களில் கையெழுத்திட்டு வருகின்றனர். இவர்களை கொலை செய்யும் முயற்சியில், அடிக்கடி பசுபதிபாண்டியன் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு, தாடிக்கொம்பு ஸ்டேஷனில் ஜாமின் கையெழுத்து போட வந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இவர்களை கொல்ல, மீனாட்சி நாயக்கன்பட்டியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியது. கடந்த வாரம் ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டியின் கார் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்பட்டது.
பசுபதிபாண்டியன் கொலை நடந்து, நேற்றுடன் ஓராண்டாகிறது. இதையடுத்து, திண்டுக்கல் நந்தவனப்பட்டியில், ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி வீடு உட்பட பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சுபாஷ் பண்ணையாரை போலீசார் இன்றுவரை தேடி வருகின்றனர். அவரின் 'பாஸ்போர்ட்' முடக்கப்பட்டுள்ளது. பல தனிப்படைகள் அமைத்து ஆந்திரா, பெங்களூரு என போலீசார் தேடிச்சென்ற போதும், பிடிக்க முடியவில்லை.
தூத்துக்குடிக்கு எப்படியும் ஒரு நாள் சுபாஷ்பண்ணையார் வருவார் என்பதால், போலீசார் தொடர்ந்து அங்கு முகாமிட்டு காத்துள்ளனர்.
