போதை பொருள் கடத்தல் தடுக்க 1,076 கி.மீ., துாரத்திற்கு ரோந்து படகு கண்காணிப்பு
போதை பொருள் கடத்தல் தடுக்க 1,076 கி.மீ., துாரத்திற்கு ரோந்து படகு கண்காணிப்பு
ADDED : ஏப் 21, 2025 05:45 AM
சென்னை : போதைப்பொருள் கடத்தலை தடுக்க, சென்னை - ராமேஸ்வரம் இடையே, 1,076 கி.மீ.,க்கு இடைமறிப்பு ரோந்து படகுகள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பாக, 44,177 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 65,661 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து, 1.06 லட்சம் கிலோ கஞ்சா, 38.31 கிலோ ஹெராயின், 2.56 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் நுழைவு வாயிலாக, தமிழகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில், 40 சதவீத போதைப்பொருள் கடத்தல், கடல் வழியாக நடப்பது தெரிய வந்துள்ளது. இதை கட்டுப்படுத்தும் பணியில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
சென்னை முதல் ராமேஸ்வரம் வரையிலான கடலோர பகுதி, 1,076 கி.மீ., துாரம் உடையது. இப்பகுதியில், 591 மீனவ கிராமங்கள் உள்ளன. கடல் வழியாக ஊடுருவும் சந்தேக நபர்கள், படகுகள் குறித்து, மீனவ கிராம மக்களுக்கு தெரிய வாய்ப்பு அதிகம்.
இதனால், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீனவ சமுதாய இளைஞர்களை இணைத்து, கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம்.
எங்களிடம், 10 இடைமறிப்பு படகுகள் உள்ளன. அவற்றில், தகவல் பரிமாற்றத்திற்கு, அதிநவீன தொழில் நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இடைமறிப்பு படகுகள் வாயிலாக, சென்னை - ராமேஸ்வரம் வரை கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

