'வங்கி வணிக தொடர்பாளர்களுக்கு நிலுவை தொகை வழங்குங்க'
'வங்கி வணிக தொடர்பாளர்களுக்கு நிலுவை தொகை வழங்குங்க'
ADDED : டிச 01, 2024 11:48 PM
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
ஏழை, கிராமப்புற மக்கள், முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலை ஊதியம், விவசாய மானியம் போன்றவற்றை பெற, அவர்களுக்கு வங்கி கணக்கு துவக்குதல். வங்கியிலிருந்து பணத்தை எடுத்து தருதல், புதிய கடன் பெற்று தருதல், நகைக்கடன் பெற்று தருதல் போன்ற சேவைகளை வங்கி, வங்கி வணிக தொடர்பாளர்கள் செய்து வந்தனர்.
வங்கிகளின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஒரு முதியோர் ஓய்வூதியத் தொகைக்கு, வங்கிகளுக்கு 30 ரூபாய் கமிஷன் வழங்கப்பட்டது. வங்கி கமிஷன், 6 ரூபாய் போக, மீதமுள்ள 24 ரூபாயை, வங்கி வணிக தொடர்பாளர்கள் பெற்று வந்தனர்.
இப்பணியை செய்வதற்காக, கம்ப்யூட்டர், அச்சு இயந்திரங்களை வாங்கி, வாடகைக்கு கடை மற்றும் அதற்கான மின் கட்டணத்தையும் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், உதவித் தொகை வழங்கும் பணியை வங்கிகள் தனியார் நிறுவனத்திடம் வழங்கிய பிறகு, வங்கி வணிக தொடர்பாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றப்பட்டனர். ஒரு கட்டத்தில், அவர்களுக்கு வழங்கிய கமிஷன் தொகை குறைக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக, கமிஷன் தொகை வழங்கப்படவில்லை.
அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வேலைக்கு, தி.மு.க., அரசு வேட்டு வைப்பது நியாயமல்ல. முதல்வர் தனிக்கவனம் செலுத்தி, அவர்களுக்கு கமிஷன் நிலுவைத் தொகை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.