ADDED : அக் 17, 2025 07:53 PM
சென்னை:'தினமலர்' செய்தியை தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறுவோருக்கு, சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக நகர்ப்புறங்களில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டம், கடந்த ஆகஸ்ட், 26ல் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதில், உணவு பரிமாறும் பணிக்காக, 100 குழந்தைகள் வரை உள்ள பள்ளிகளில், ஒருவர் என்ற அடிப்படையில், தற்காலிக பணியில் பெண்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு, மாதம் 1,500 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அது வழங்கப் படவில்லை. இது குறித்து, நம் நாளிதழில் கடந்த, 10ம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை அவர்களுக்கு, செப்டம்பர் மாதத்துக்கான, 1,500 சம்பளம், ஆகஸ்ட் மாதம் நான்கு நாட்கள் மட்டும் பணிபுரிந்ததற்காக, 200 ரூபாயையும் சேர்த்து, 1,700 ரூபாய், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

