கூடுதல் சுமைக்கு அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
கூடுதல் சுமைக்கு அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
ADDED : ஏப் 14, 2025 06:21 AM

சென்னை : 'நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கூடுதலாக உடைமைகளை எடுத்து வரும் பயணியருக்கு, ஒவ்வொரு கிலோவுக்கும், 1.5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை விடுமுறையை கொண்டாட, சென்னையில் இருந்து ஏராளமான பயணியர், தங்கள் சொந்த ஊர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர். ரயில் பயணியர், குறிப்பிட்ட அளவு மட்டுமே உடைமைகளை எடுத்து செல்ல வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், சமீப காலமாக, பயணியர் கூடுதல் உடைமைகளை எடுத்துச் செல்கின்றனர்.
எனவே, கூடுதல் உடைமைகளை எடுத்து சென்றால், அபராதம் விதிக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் அறிக்கை:
ரயில்களில் செல்லும் பயணியர், முதல் வகுப்பு ஏ.சி., பெட்டியில், 70 கிலோ; இரண்டாம் வகுப்பு ஏ.சி., பெட்டியில், 50 கிலோ, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில், 35 கிலோ வரை மட்டுமே, உடைமைகளை எடுத்து செல்ல அனுமதி உண்டு.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கூடுதல் எடையில் உடைமைகளை எடுத்து வரும் பயணியருக்கு, 10 கிலோ முதல், 15 கிலோ வரை, ஒவ்வொரு கிலோவுக்கும், ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

