ஓய்வூதிய திட்டம்: அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்பிப்பு
ஓய்வூதிய திட்டம்: அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்பிப்பு
ADDED : அக் 01, 2025 07:37 AM

சென்னை : ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராயும் குழுவினர், இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளனர்.
தமிழகத்தில், 2003 முதல், மத்திய அரசு உத்தரவின்படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.
மத்திய அரசு தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்வதற்கு, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், மூன்று அதிகாரிகள் அடங்கிய குழு, பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இக்குழுவினர், செப்டம்பர், 30ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.
ஓய்வூதிய திட்டம் தொடர்பாக, 194 அரசு ஊழியர்கள் சங்கங்களிடம், ஒன்பது சுற்றுகளாக கருத்துக்கள் கேட்கப்பட்டன.
இந்நிலையில், இடைக்கால அறிக்கையை, இந்த குழு வினர் அரசிடம் நேற்று சமர்பித்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு ஊழியர்கள் சங்கங்கள், எல்.ஐ.சி., மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்கள் எண்ணிக்கை அதிகம். மேலும், மத்திய அரசு தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மற்றும் எல்.ஐ.சி.,யுடன் மேலும் ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது.
எனவே, குழு தன் பணியை இறுதி செய்து அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, இடைக்கால அறிக்கையை, குழு அரசிடம் சமர்ப்பித்து உள்ளது.
ஆலோசனை கூட்டங்களை மேற்கொண்ட பின், இறுதி அறிக்கை விரைவில் அரசுக்கு தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓய்வூதிய குழு இடைக்கால அறிக்கைக்கு, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கால நீட்டிப்பு என்பதை நேரடியாக பெறாமல், இப்படி மறைமுகமாக பெறுவதை ஏற்க இயலாது. ஓய்வூதிய குழு தன் நம்பகத்தன்மையை இழந்து விட்டது' என்று கூறியுள்ளார்.