ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு
ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு
ADDED : அக் 01, 2025 07:39 AM

ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
'ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் செப்., 1ல் தீர்ப்பளித்தது.
அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா என்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், 'அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற, ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என தீர்ப்பளித்தனர்.
அதே நேரத்தில் ஓய்வு பெறும் வயதை எட்டுவதற்கு ஐந்தாண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கக்கூடிய அத்தனை ஆசிரியர்களும் தொடர்ந்து ஆசிரியராக பணியில் தொடர, தகுதித் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை அது மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டது.
'அதுமட்டுமில்லாமல் பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்பொழுது உச்ச நீதிமன்றம் விடுமுறையில் இருப்பதால், அக்டோபர் இரண்டாம் வாரத்திற்கு பின் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டில்லி சிறப்பு நிருபர் -